Tuesday, December 05, 2017

பேசு சசி பேசு


கோவை வெரைட்டி ஹால் பகுதியில் கடந்தமாதம் 19/11/2017 அன்று சசிகலா 30 வயது மனநிலை பாதித்த நிலையில் தனியாக சுற்றித்திரிந்ததை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் உதவியுடன் மீட்டு ஈரநெஞ்சம் அறக்கட்டளை பராமரிப்பிலுள்ள மாநகராட்சி முதியோர் இல்லத்தில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டார் .


 



மனநிலை பாதித்த சசிகலாவிற்கு முறையான பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக அதற்கான அதிகாரிகளின் அனுமதி பெற்று காரமடையில் உள்ள கருணை இல்லம் காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து சசிகலாவின் உறவினர்களை தேடும் முயற்சி ஈரநெஞ்சம் அறக்கட்டளை மேற்கொண்டது.
தொடர்ந்து ஈரநெஞ்சம் அறக்கட்டளை குழுவினர் சசிக்கலாவிற்கு கவுன்சிலிங் வழங்கி வந்த நிலையில் 10 நாட்களுக்கு பிறகு சற்று நினைவுகள் திரும்பியது.
அதன் மூலம் நேற்று முன் தினம் 1/12/2017 அன்று சசிக்கலா தன் கணவரின் அலைபேசி எண் கூற , அந்த எண்ணில் தொடர்பு கொண்டபோது ஆந்திரா மாநிலம் விஜயவாடா பகுதியில் வசிப்பவர் ஜானகிராமன் என்பவர் சசிகலாவின் கணவர் என்பது இறுதி செய்யப்பட்டு அவரிடம் சசிக்கலாவை பற்றி தெரிவிக்கப்பட்ட போது .



ஜெயராம் அழுது கொண்டே அவர் என்னுடைய மனைவிதான் திடீர் என்று அவளுக்கு மனநிலை பாதித்து விட்டது, எங்கு இருக்கிறாள் எப்படி இருக்கிறாள் , எங்களுக்கு இரண்டு மாத பெண் குழந்தை இருக்கிறது எல்லாவற்றையும் தவிக்க விட்டு காணாமல் போய் விட்டாள். உடனடியாக கிளம்பி வருகிறேன் அவளை அழைத்துச் செல்ல என்று ரயில் மூலம் கிளம்பி இன்று காலை 3/12/2017 தன் இரண்டு மாத குழந்தையுடன் கோவைக்கு வந்த ஜானகிராமன் ,ரயில் நிலையத்தில் இருந்து ஈரநெஞ்சம் அறக்கட்டளை குழுவினர் அவரை அழைத்துக்கொண்டு காரமடை கருணை இல்லத்திற்கு அழைத்து சென்று சசிகலாவை காட்டியது.



ஜானகிராமன் சசிக்கலாவை கட்டி தழுவி கண்ணிற் விட்டு அழுத காட்சி மெய் சிலிர்த்தது.




பிறகு தனது குழந்தையை சசிக்கலாவிடம் கொடுத்து பேசு சசி , இதோ பார் நம் குழந்தை பால் கூட குடிக்காமல் தவிக்கிறாள் ,இதோ நானும் வந்து விட்டேன் இனி உன்னை பத்திரமாக பார்த்துக் கொள்கிறேன் பேசு சசி என்று அவர் மனைவியை அனைத்துக் கொண்டு அழுதது பார்ப்பவர் கண்களில் கண்ணீர் கசிந்தது.



அதன் பிறகு அருகில் இருந்தவர்கள் ஜானகிராமனுக்கு அறிவுரை வழங்கி அவரது மனைவியை அவருடன் அவரது ஊருக்கு அனுப்பி வைத்ததில் அனைவருக்கும் பெரும் சந்தோசமும் நிம்மதியும் அடைந்தது.



ஜானகிராமன் தன் மனைவியை பத்திரமாக மீட்டு தன்னோடு சேர்த்து வைத்த அனைவருக்கும் மனதார நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
~ஈரநெஞ்சம் அறக்கட்டளை
https://www.facebook.com/eeranenjam.organization

Saturday, November 18, 2017

நான் Last Bench Student ~ மகேந்திரன்

நேற்று நான் படித்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அமைப்பின் சார்பாக நானே எதிர் பார்க்காத அழைப்பு வந்தது.

last bench school student boy picture art க்கான பட முடிவு

அதை ஏற்றுக்கொண்டு அங்கு சென்ற பொழுது அங்கு இருந்த முன்னாள் மாணவர்கள் அனைவரும் எனக்கு முன் படித்தவர்களாக இருந்தனர் , இன்றைய நிலையில் கோவையில் மிக உயர்ந்த நிலையில் இருக்கும் சிறப்பு வாய்ந்தவர்களாக பலர் இருந்தனர். அந்த பள்ளியை தத்தெடுத்து மிகவும் சிறப்புடன் பராமரிப்பது அவர்கள் தான் என்று ஊருக்கே தெரிந்த ஒன்று. அங்கு அவர்கள் நடத்தும் வாராந்திர கூட்டத்தில் நேற்று நான் கலந்து கொண்டதில் எனக்கு கொஞ்சம் பெருமையாக இருந்தது.



ஆனாலும் அனைவரும் எனக்கு முன் படித்தவர்கள் என்பதால் அவர்கள் எல்லோரும் வயதில் மூத்தவர்களாக இருந்தனர் . அதனால் அங்கு எனக்கு பலரும் அறிமுகம் இல்லாதவராக இருந்தனர் . கடைசி பெஞ்சில் அமர்ந்து அந்த கூட்டத்தை கவனிக்கும் பொழுது, அதே இடத்தில் நான் அன்றும் கடைசி பெஞ்சு மாணவனாக அமர்ந்து இருந்தது ஞாபகத்தில் வந்து போனது.



கூட்டம் முடியும் தருவாய் வந்தது, என்னை எதற்கு அழைத்து வந்தார்கள் என்ற குழப்பத்தில் நான் மூழ்கும் தருணம் . என்னை அழைத்து வந்த அந்த உயர்ந்த மாணவர் பேசிக்கொண்டு இருந்தார். அப்பொழுது , இங்கு இருக்கும் உங்களுக்கு ஈரநெஞ்சம் அறக்கட்டளை பற்றி தெரியுமா என்று கேட்டார் , பலரும் தெரியும் , தெரியும் என்றார்கள். அதன் நிர்வாகியை தெரியுமா என்றார் , ஆனால் அது யார் என்று யாருக்கும் தெரியவில்லை . தொடர்ந்து அவர் என்னை கை காட்டி அவரை நான் இங்கு அழைத்து வந்துள்ளேன் வாங்க மகேந்திரன் என்று என்னை சிறப்புடன் அழைத்தார் தலைமை இடத்திற்கு.


பின் இருக்கையில் இருந்த நான் அவர் அழைத்ததும் முன் வந்து மைக்கை எடுத்து அனைவருக்கும் வணக்கம் என்றதும் ... அந்த நாளில் இதே பள்ளியில் 6 ஆம் வகுப்பு படிக்கையில் தெரிந்த செய்யுளை மாணவர்கள் மத்தியில் ஒப்பிக்க கூச்சப்பட்டு பேசாமல் மாணவர்களின் கேளிக்கைக்கு நின்றது நினைவு வந்தது.



சுதாரித்துக் கொண்டு என்னை பற்றி அறிமுகம் செய்து என்னுடைய பணிகளை பற்றி விளக்கம் கொடுத்து பேசி முடித்தேன். அனைவரும் எழுந்து நின்று கைதட்டி மரியாதை செலுத்தியதும் என்னை அறியாமலேயே கண் கலங்கியது.



தொடர்ந்து அந்த மாணவர் சங்கத்தின் தலைவரும் மிக பெரிய தொழிலதிபருமான அவர் என்னைப் பார்த்து உங்களுக்காக, அதாவது உங்கள் அறக்கட்டளைக்காக சில சலுகைகள் உதவிகள் உங்கள் அறக்கட்டளைக்கு அளிக்க ஏற்கனவே முடிவு செய்து இருந்தோம். ஆனால் அதை உங்களிடம் சேர்ப்பதில் தாமதம் ஆகிவிட்டது. ஏதோ ஒரு சக்தி உங்களை இங்கு நேரடியாக வரவழைத்து உள்ளது என்றார்.

அம்மனிதர் மிகவும் உயர்ந்தவர் அவருடைய தொழிற்சாலையில் தனக்கு ஒரு வேலை கிடைக்க வேண்டும் என்று தவம் கிடந்தவர்களில் நானும் ஒருவன். அவர் வாயால் என்னை பார்த்து நீங்கள் இந்த பள்ளியில் படிக்க இந்த பள்ளி என்ன தவம் செய்தது என்றார் அதை கேட்டதும் அவருடைய எளிமையும் உயர்ந்த குணமும் என்னை சிலிர்க்க வைத்தது.



இன்னொரு ஞாபகம் அந்த நேரத்தில் , அந்த பள்ளியில் நான் 8 ஆம் வகுப்பு படிக்கும் போது நடந்த அரையாண்டுத் தேர்வில் மொத்த பாடத்திலும் சேர்த்து 100 மார்க் கூட வாங்காமல் என்னுடைய அப்பாவிடம் அடி வாங்கியது இப்போது நினைக்கும் போதும் அந்த அடி இன்னமும் வலிப்பது போலிருக்கிறது.



இறுதியாக அங்கு ஏற்பாடு செய்திருந்த சிற்றுண்டியை முடித்துக் கொண்டு பள்ளியின் நுழைவாயிலைக் கடக்கும் பொழுது " படிக்கும் பொழுது தாமதமாக வந்ததற்கு தலைமை ஆசிரியரிடம் அடிவாங்கினது ஞாபகம். அடடா " அது ஒரு அழகிய பொற்காலம்" என்ற ஒரு சிலிர்ப்போடு விடைபெற்றேன்.



~மகேந்திரன்