Thursday, August 02, 2018

20 வருட சாபம் மாற்றம்




சுமார் இருபது வருடங்களுக்கு மேலாக அழுக்கு நிறைந்த உடுத்திய அதே உடையிலும் , சடை பின்னி ஓட்டி போன முடிகள் , சாலையில் கிடைப்பதை தின்றுக் கொண்டும் உற்றார் உறவினர் என எல்லோரும் கை விட்டதால் வந்த பரிதாபம்.


 

கோவை காரமடையில் சின்னம்மாக்கும், அழகர் சாமிக்கும் பிறந்த கிருஷ்ணசாமி(53), ஒரு அக்கா இரு அண்ணன் , கிருஷ்ணசாமி மூன்றாம் வகுப்பு மட்டும் படித்த நிலையில் , இறந்தவர்களின் வீட்டில் சடலங்களுக்காக செய்யும் சடங்குகளுக்கு சங்கு ஊதியும் பணி செய்து வந்தார். இதனால் ஊரில் உள்ளவர்கள் அனைவரும் பிணத்திற்கு சங்கு ஊதுபவன் என்று ஒதுக்கி வைத்துள்ளனர். சில வருடங்களில் கிருஷ்ணசாமியின் தந்தை காணாமல் போக பிழைப்பை தேடி கோவை காந்திபார்கில் குடி ஏறினர் .
 

அங்கே ஒரு போட்டோ ஸ்டூடியோவில் வேலைக்கு சேர்ந்த கிருஷ்ணசாமி நல்ல ஊதியத்துடன் வாழ்ந்து வந்தார். உடன் பிறந்தவர்களுக்கு எல்லோரும் திருமணம் ஆகி விட்டை விட்டு வெளியேறியதும் தன் அம்மாவை பாசத்துடன் நல்லபடியாக பார்த்துக் கொண்டார் . திடீர் என்று அம்மா வின் இறப்பும், அதன் அடுத்து தான் வேலை செய்து வந்த போட்டோ ஸ்டூடியோ உரிமையாளரின் இறப்பும் இவர் மனதை பெரிதும் பாதித்து உள்ளது.


இருந்த வேலையும் இல்லாமல் போக , தங்கி இருந்த வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்து கிருஷ்ணசாமியை வெளியேற்றி உள்ளார். உடன் பிறந்தவர்களும் இவரை கவனித்துக் கொள்ள மறுத்துவிட்டனர். இதனால் தனிமை மட்டுமே இவருக்கு துணையானது.

யாரிடமும் பிச்சை கேட்க மனம் இல்லை, பசிக்கு உணவு கிடைக்காமல் குப்பை தொட்டியில் தேடும் நிலை , காலப்போக்கில் இவர் தோற்றம் கண்டு அனைவரும் மனநிலை பாதித்தவர் என்றே இச் சமுதாயம் முத்திரைக் குத்தி இருபது வருடங்களாக தெருவோரம் அமர்த்திவிட்டது .
இந்நிலையில் கிருஷ்ணசாமி சாலை ஓரம் உள்ள குப்பை தொட்டியில் உணவை தேடுவதை கண்டு ஈரநெஞ்சம் அறக்கட்டளை கிருஷ்ணசாமியை மீட்டு முதலுதவி வழங்கி ஈரநெஞ்சம் அறக்கட்டளையின் பராமரிப்பில் ஏற்றுக்கொண்டது கொண்டது.



மேலே குறிப்பிட்ட அனைத்தும் கிருஷ்ணசாமி கூறியது , தான் மனிதர்களிடம் பேசியே 20 வருடம் ஆகிடிட்டது. பசிக்காக மனிதர்களிடம் அடிவாங்கியது தான் மிட்சம், இன்று உங்களால் மோட்சம் பெற்றேன் என்று கண்கலங்கும் போது சமுதாயத்தை நினைத்து வேதனைப்பட வைக்கிறது.
~ஈரநெஞ்சம் அறக்கட்டளை
https://www.facebook.com/eeranenjam.organization




Tuesday, July 17, 2018

அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் காலை உணவு..! கோவை முதியோர் இல்ல அம்மாக்களின் பேரன்பு


அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் காலை உணவு..! கோவை முதியோர் இல்ல அம்மாக்களின் பேரன்பு


 

``டி
பன் வந்துருச்சு…" எனச் சொல்லிக்கொண்டே தட்டுடன் துள்ளிச் செல்கிறான், 8-ம் வகுப்பு சச்சின்.
அடுத்த சில நிமிடங்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று கூடுகிறார்கள். ``டேய் சாய்… இன்னிக்கு இட்லியாம்" என்கிற 6-ம் வகுப்பு சுரேஷ், தனது உற்சாகத்தை மற்ற மாணவர்களுக்கும் கடத்துகிறான்.
 ``பாட்டிகள் வந்து பரிமாறுவாங்க. எல்லாரும் வரிசைல நில்லுங்க" என ஒழுங்குப்படுத்துகிறார் பள்ளியின் தமிழ் ஆசிரியர்.



கோவை, ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் அன்றாடம் காணும் காட்சி இது. அந்தக் காலத்தில் பிரிட்டிஷ் கான்வென்ட் என்று பெயர் எடுத்த இந்தப் பள்ளியில், தற்போது 300 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர், குடிசைப் பகுதியிலிருந்து வருபவர்கள். இவர்களின் பெற்றோர்கள், விடியலிலேயே கிளம்பி கூலி வேலைக்குச் சென்று வியர்வையைச் சிந்தினால்தான் அன்றைய தினம் அரை வயிற்றுக்கு ஏதாவது கிடைக்கும்.
புத்தகம், மதிய சத்துணவு, சைக்கிள் என அரசு வழங்கினாலும், குடும்பச் சூழ்நிலையால் இவர்களில் பெரும்பாலானோருக்குக் காலை உணவு என்பது கானல் நீர்தான். அந்தக் கவலையை நீக்கி, நேச மழையைப் பொழிந்துவருகிறது, `ஈர நெஞ்சம்' அறக்கட்டளை. அந்த முதியோர் இல்லத்துக்குச் சென்றோம்.
சகுந்தலாஅந்தப் பள்ளிக்கு அருகில் இயங்கிவருகிறது, ஈரநெஞ்சம் அறக்கட்டளைக்குச் சொந்தமான முதியோர் இல்லம். பெற்றெடுத்து வளர்த்த பிள்ளைகளால் `பாரம்' எனத் தூக்கி வீசப்பட்ட இந்த முதியோர்களுக்கு,  சில நல்ல உள்ளங்களின் உதவியால், வாழ்வு நகர்ந்துகொண்டிருக்கிறது. அப்படித் தங்களுக்குக் கிடைக்கும் உணவின் ஒரு பகுதியை இந்த மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்குத் தினமும் பரிமாறுகிறார்கள் இந்த அம்மாக்கள்.
``எனக்கு 65 வயசு ஆகுது கண்ணு. ஒரே ஒரு பையன். வீட்டு வேலை செஞ்சு தங்கம்போல வளர்த்தோம். படிச்சு ஆளானவனுக்குக் கல்யாணமும் பண்ணிவெச்சோம். அதோடு முடிஞ்சது. அவன் பொண்டாட்டிக்கு என்னைப் புடிக்கல. அவளோட சேர்ந்து என்னைத் திட்டிட்டே இருந்தான். இது சரிவராதுன்னு வெளிய வந்துட்டேன்.
கிடைக்கற வேலைகளை செஞ்சு காலத்தை ஓட்டிட்டிருந்தேன். ஒருகட்டத்துல, வேலை செய்ய முடியலே. இங்கே வந்துட்டேன். சமயத்துல வெளியில இருந்தும் எங்களுக்குச் சாப்பாடு வரும். இல்லாட்டி, இங்கே இருக்கறதை வெச்சு நாங்களே சமைச்சுக்குவோம். பக்கத்துல இருக்கற ஸ்கூல் பசங்களுக்கும் சேர்த்துத்தான் சமைப்போம். அவங்களுக்கு எங்க கையால பரிமாறும்போது பேர பசங்களுக்குச் சோறு போடற சந்தோஷம் கிடைக்குது. இதைவிட மனுசனுக்கு வேற என்ன சாமி சந்தோஷம் வேணும்?" என்கிற சகுந்தலா பாட்டி முகத்தில் அவ்வளவு ஆனந்தம்.
``எனக்கு மூணு பசங்க தம்பி. என் புருஷன் இருந்தவரை நல்லாத்தான் இருந்தேன். மூணு பேரையும் நல்லா ஆளாக்கினோம்.கோபாலம்மாள் ஒருத்தன் பெங்களூருல இருக்கான். மத்த ரெண்டு பேரும் இங்கேதான். ஒருத்தனுக்குத்தான் கல்யாணம் ஆச்சு. அவன் வீட்லதான் இருந்தேன். அவன்தான் கொஞ்சம் நல்ல வேலையிலும் இருந்தான். மத்த ரெண்டு பேருக்கும் வருமானத்துக்கே கஷ்டம்.  ஆனா, என்னை மருமகளுக்குப் பிடிக்கலை. `எப்போ பாரு இங்கயே இருக்காங்க. மத்த பசங்க வீட்டுக்கும் போகவேண்டியதுதான'னு சொல்லிட்டே இருப்பா. நம்மால எதுக்குப் பிரச்னை'னு வெளியே வந்துட்டேன். என் புருஷன் என்னைய அப்படித் தாங்கினார். இப்போ இந்தப் பேரப் பசங்களுக்குச் சமைச்சுப் போட்டு, அந்தச் சந்தோஷத்துலயே மிச்ச நாளை கழிக்கிறேன்" எனக் கண்ணீரைத் துடைத்துக்கொள்கிறார் 75 வயது கோபாலம்மாள்.
அன்று பாட்டிகள் சமைத்த சாப்பாட்டை எடுத்துச் செல்வதற்காக, மாணவர்கள் சிலர் முதியோர் இல்லத்துக்கு வந்திருந்தனர். சகுந்தலா பாட்டி சாம்பார் பாத்திரத்தை கஷ்டப்பட்டு தூக்கிவர, ``பாட்டிமா நீங்க கஷ்டப்படாதீங்க. என்கிட்ட கொடுங்க" என வாங்கிக்கொள்கிறான், 7-ம் வகுப்பு சிவா. அவன் கன்னத்தைப் பிடித்து கொஞ்சுகிறார் சகுந்தலா அம்மா.

ஈரநெஞ்சம் அறக்கட்டளையின் மகேந்திரன், ``சாலையோரம் ஆதரவற்று இருப்பவர்கள், பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்கள், மனநலம் மகேந்திரன்பாதிக்கப்பட்டவர்கள் போன்றோருக்கு மறுவாழ்வு கொடுக்கும் எண்ணத்தில் இந்த அறக்கட்டளையை ஆரம்பித்தோம். எங்களால் முடிந்த உதவியைச் செய்து, அவர்களை மீண்டும் அவர்களது வீட்டில் சேர்த்துவருகிறோம். ஒருமுறை, நிகழ்ச்சிக்காக அருகில் இருக்கும் மாநகராட்சி பள்ளிக்குச் சென்றிருந்தேன். அப்போதுதான் அங்கிருக்கும் மாணவர்களின் சூழ்நிலையைச் சொல்லி, ஏதாவது உதவி செய்ய முடியுமா? என்று கேட்டனர். இதைப் பாட்டிகளிடம் சொன்னதும், `புள்ளைகளுக்குக் காலை உணவை நாங்க செஞ்சு கொடுக்கிறோம்' என்றனர்.
எங்கள் இல்லத்துக்கு உணவு கொடுக்க வருபவர்களிடம், மாணவர்களுக்கும் சேர்த்து கொடுக்குமாறு கேட்போம். பள்ளி விடுமுறை நாள்கள் தவிர, மற்ற நாள்களில், காலை உணவு கொடுக்கிறோம். எங்கள் இல்லத்துக்கு உணவு கொடுப்பவர்களுக்கு ஆரம்பத்தில் மரக்கன்றுகளைக் கொடுத்துவந்தோம். தண்ணீர்ப் பஞ்சம், பல்வேறு பிரச்னையால் இப்போது கொடுக்க முடியவில்லை. கோயில்களுக்கு பூ கட்டி கொடுப்பது, விபூதி கொடுப்பது போன்ற பணிகளை இந்தப் பாட்டிகள் செய்வார்கள். தற்போது, இந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் சமைத்துக் கொடுப்பதன் மூலம் பெரும் சந்தோஷம் அடைகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில், மாணவர்களுக்குக் காலை உணவு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
``மிகவும் பின்தங்கிய குடும்பத்திலிருந்து வருபவர்கள்தாம் இங்கு அதிகம். காலை உணவை உட்கொள்ளாமல் வருவதால், பிரேயரிலேயே மயங்கி விழும் காட்சி முன்பு அடிக்கடி நடக்கும். தற்போது, அந்தக் காட்சி மறைந்துவிட்டது" என முகம் மலர்கின்றனர் பள்ளி ஆசிரியர்கள்.
முதியோர் இல்ல அம்மாக்கள்
தாய் உள்ளம் எங்கே இருந்தாலும், அப்படியேத்தான் இருக்கும் என்பதை இந்த அம்மாக்கள் நிரூபித்துள்ளனர். 

Wednesday, June 20, 2018

நான் படித்த பள்ளி கூடத்தில்

நேற்று நான் படித்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அமைப்பின் சார்பாக நானே எதிர் பார்க்காத அழைப்பு வந்தது.



அதை ஏற்றுக்கொண்டு அங்கு சென்ற பொழுது அங்கு இருந்த முன்னாள் மாணவர்கள் அனைவரும் எனக்கு முன் படித்தவர்களாக இருந்தனர் , இன்றைய நிலையில் கோவையில் மிக உயர்ந்த நிலையில் இருக்கும் சிறப்பு வாய்ந்தவர்களாக பலர் இருந்தனர். அந்த பள்ளியை தத்தெடுத்து மிகவும் சிறப்புடன் பராமரிப்பது அவர்கள் தான் என்று ஊருக்கே தெரிந்த ஒன்று. அங்கு அவர்கள் நடத்தும் வாராந்திர கூட்டத்தில் நேற்று நான் கலந்து கொண்டதில் எனக்கு கொஞ்சம் பெருமையாக இருந்தது.

ஆனாலும் அனைவரும் எனக்கு முன் படித்தவர்கள் என்பதால் அவர்கள் எல்லோரும் வயதில் மூத்தவர்களாக இருந்தனர் . அதனால் அங்கு எனக்கு பலரும் அறிமுகம் இல்லாதவராக இருந்தனர் . கடைசி பெஞ்சில் அமர்ந்து அந்த கூட்டத்தை கவனிக்கும் பொழுது, அதே இடத்தில் நான் அன்றும் கடைசி பெஞ்சு மாணவனாக அமர்ந்து இருந்தது ஞாபகத்தில் வந்து போனது.

கூட்டம் முடியும் தருவாய் வந்தது, என்னை எதற்கு அழைத்து வந்தார்கள் என்ற குழப்பத்தில் நான் மூழ்கும் தருணம் . என்னை அழைத்து வந்த அந்த உயர்ந்த மாணவர் பேசிக்கொண்டு இருந்தார். அப்பொழுது , இங்கு இருக்கும் உங்களுக்கு ஈரநெஞ்சம் அறக்கட்டளை பற்றி தெரியுமா என்று கேட்டார் , பலரும் தெரியும் , தெரியும் என்றார்கள். அதன் நிர்வாகியை தெரியுமா என்றார் , ஆனால் அது யார் என்று யாருக்கும் தெரியவில்லை . தொடர்ந்து அவர் என்னை கை காட்டி அவரை நான் இங்கு அழைத்து வந்துள்ளேன் வாங்க மகேந்திரன் என்று என்னை சிறப்புடன் அழைத்தார் தலைமை இடத்திற்கு.

பின் இருக்கையில் இருந்த நான் அவர் அழைத்ததும் முன் வந்து மைக்கை எடுத்து அனைவருக்கும் வணக்கம் என்றதும் ... அந்த நாளில் இதே பள்ளியில் 6 ஆம் வகுப்பு படிக்கையில் தெரிந்த செய்யுளை மாணவர்கள் மத்தியில் ஒப்பிக்க கூச்சப்பட்டு பேசாமல் மாணவர்களின் கேளிக்கைக்கு நின்றது நினைவு வந்தது.

சுதாரித்துக் கொண்டு என்னை பற்றி அறிமுகம் செய்து என்னுடைய பணிகளை பற்றி விளக்கம் கொடுத்து பேசி முடித்தேன். அனைவரும் எழுந்து நின்று கைதட்டி மரியாதை செலுத்தியதும் என்னை அறியாமலேயே கண் கலங்கியது.

தொடர்ந்து அந்த மாணவர் சங்கத்தின் தலைவரும் மிக பெரிய தொழிலதிபருமான அவர் என்னைப் பார்த்து உங்களுக்காக, அதாவது உங்கள் அறக்கட்டளைக்காக சில சலுகைகள் உதவிகள் உங்கள் அறக்கட்டளைக்கு அளிக்க ஏற்கனவே முடிவு செய்து இருந்தோம். ஆனால் அதை உங்களிடம் சேர்ப்பதில் தாமதம் ஆகிவிட்டது. ஏதோ ஒரு சக்தி உங்களை இங்கு நேரடியாக வரவழைத்து உள்ளது என்றார்.



அம்மனிதர் மிகவும் உயர்ந்தவர் அவருடைய தொழிற்சாலையில் தனக்கு ஒரு வேலை கிடைக்க வேண்டும் என்று தவம் கிடந்தவர்களில் நானும் ஒருவன். அவர் வாயால் என்னை பார்த்து நீங்கள் இந்த பள்ளியில் படிக்க இந்த பள்ளி என்ன தவம் செய்தது என்றார் அதை கேட்டதும் அவருடைய எளிமையும் உயர்ந்த குணமும் என்னை சிலிர்க்க வைத்தது.

இன்னொரு ஞாபகம் அந்த நேரத்தில் , அந்த பள்ளியில் நான் 8 ஆம் வகுப்பு படிக்கும் போது நடந்த அரையாண்டுத் தேர்வில் மொத்த பாடத்திலும் சேர்த்து 100 மார்க் கூட வாங்காமல் என்னுடைய அப்பாவிடம் அடி வாங்கியது இப்போது நினைக்கும் போதும் அந்த அடி இன்னமும் வலிப்பது போலிருக்கிறது.

இறுதியாக அங்கு ஏற்பாடு செய்திருந்த சிற்றுண்டியை முடித்துக் கொண்டு பள்ளியின் நுழைவாயிலைக் கடக்கும் பொழுது " படிக்கும் பொழுது தாமதமாக வந்ததற்கு தலைமை ஆசிரியரிடம் அடிவாங்கினது ஞாபகம். அடடா " அது ஒரு அழகிய பொற்காலம்" என்ற ஒரு சிலிர்ப்போடு விடைபெற்றேன்.

~மகேந்திரன்

Tuesday, March 27, 2018

குப்பைத் தொட்டி

குப்பைத் தொட்டி !?!?
~~~~~~~~~~~~~~~



அந்த ஊருல இருபது பேர் கொண்ட ஒரு முதியோர் காப்பகம் இருந்தது ...

காலை விடிந்தது வயோதிகம் நிறைந்த முகங்கள், பசி படர்ந்த வயிறு வாடிய தோற்றம் விருந்தினர் உணவை எதிர்பார்த்து எதிர்பார்த்து மணி 11 தாண்டியது...

ஒரு சிலர் பகட்டுடை உடுத்து காப்பகத்திற்கு வந்தனர் யார் நிர்வாகம் என்றனர், வெளிநாட்டு உதவியா என்றனர், யாருடைய உதவி, என்ன நோக்கம் என்று இன்னும் பல கேள்விகள் கேட்டனர். வயிறு நிறைய பசி மட்டுமே இருந்தும் எல்லாவற்றிற்கும் பணிந்த குரலில் பதில் தந்தனர்...

சந்தேகங்கள் தெளிவானதும் பழைய துணி இருக்கிறது எடுத்துக் கொள்ளுங்கள் என்று கொண்டுவந்த மூட்டையாக கட்டிய துணியை தானம் செய்து கிளம்பினர்...

உள்ளே ஒரு வயதான பாட்டி வாடிய குரலில் " அப்போ அவங்க சாப்பாடு கொடுக்க வரலையா " என்று முனங்கியது...

காலை பசி தாண்டி மதிய பசி வேளை வந்தது...

பசி மயக்கத்தில் இருந்த முதியவர்களை தேடி மற்றும் சிலர் வந்தார்கள் ...

அவர்களும் அதே கேள்விகளை வெவ்வேறு விதமாகக் கேட்டு விசாரணைக்கு பிறகு , காலையில் சமைத்த உணவு 10 பேருக்கு மீதம் இருக்கும் அதை கொடுக்க வந்தோம் தானத்தில் சிறந்தது அன்னதானம் என்று தானம் செய்து விட்டு கிளம்பினர். நல்ல வேளை உணவு கெடாமல் இருந்தது அதை இருபது பேரும் பங்கிட்டு தங்களது பாதி வயிற்றை நிறைத்தனர்...

மாலை வந்தது ஒரு குடும்பம் வந்தது , அவர்களும் முன்பு வந்தவர்கள் கேட்ட கேள்வியை காட்டிலும் இன்னும் கூடுதலாக தங்களை தெளிவு படுத்திக் கொள்ள பல விளக்கங்களை கேட்டு விட்டு முடிவில் , தங்கள் வீட்டுக்கருகில் இருக்கும் ஒரு பாட்டியை தங்கள் காப்பகத்தில் சேர்க்க வந்துள்ளோம் இங்கே இலவசமாக பார்த்துக் கொள்வதாக கேள்விப்பட்டோம் ஆதரவற்ற பாட்டியை பராமரிக்க சொந்தமென்று யாருமில்லை என்று கூறி மூன்று தலை முறை கண்ட முப்பது சொந்தங்களுக்கு சொந்தக்காரியை சொந்தங்களே காப்பகத்தில் விட்டு சென்றனர்.

முதிய வயதில் புதிய தோழிகள் கிடைத்த மன ஆறுதலில் தன் கதையைப் பகிர்ந்து சோகத்தை ஓரளவு கரைத்துக் கொண்டது அந்த புது பாட்டி.

சற்று நேரத்தில் ஒரு தம்பதியினர் வந்தார்கள் தங்கள் குழந்தைக்கு இந்த தேதியில் பிறந்தநாள் வருகிறது, அதனால் ஊரில் உள்ள பெரிய ஹோட்டலில் உயர்தர உணவுக்கு ஏற்பாடு செய்கிறோம் என்றனர். ஆனால் வயோதிகத்திற்கு அந்த உணவு ஏற்காது வேறு ஏதாவது என்று வேண்டுகோள் முன் வைக்க . நாங்கள் வேறு இடம் செல்கிறோம் என்று வருத்தத்தில் விடை பெற்றனர்.

இரவு பசி வேளை வந்தது கூடவே கூடுதலாக பசியும். கூட..

கண் உறங்குவதற்கு முன் வாசலில் ஒரு வாகனம் வந்தது அதில் இருந்து வந்தவர்கள் திருமண விழாவில் 50 பேர் சாப்பிடும் அளவிற்கு உணவு மீதியாகி விட்டது அதை கொடுக்க வந்துள்ளோம் என்று சொல்லி முடிப்பதற்குள் , பசி முந்திக் கொண்டு வாய் திறந்து கண்டிப்பாக ஏற்றுக் கொள்கிறோம் என்று அந்த உணவை பெற்றுக் கொண்டது.

கல்யாண வீட்டில் சாப்பாடு மதியம் செய்தது போல சாதம் தவிர மற்ற பதார்த்தங்கள் எல்லாம் கெட்டுப்போய் லேசான வாடையால் காட்டிக் கொடுத்தது , பதார்த்தங்களை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, வெறும் சாதத்தில் தண்ணீர் ஊற்றி கரைத்து காப்பகத்தில் உள்ள 21 பேரும் குடித்து விட்டு அன்றைய பொழுதை நிறைவு செய்தனர். அடுத்த நாள் காலையுணவுக்கு மீந்து போன சாதம் இருக்கும் நிம்மதியுணர்வுடன் அனைவரும் உறங்க சென்றனர்.

முதல் நாள் வந்த கந்தல் துணியோடும், மீதம் இருந்த கல்யாண வீட்டு கஞ்சியோடும் விடியலுக்காக காத்திருந்தது அந்த காப்பகம்..!!!

தங்கள் வீடுகளில் தேவையில்லாத குப்பையாக கருதிய முதியவர்களை , காப்பகத்தை குப்பைத் தொட்டியாக எண்ணி விட்டுச் செல்லும் நபர்களுக்கு தெரிவதில்லை தாங்கள் விட்டுச் செல்வது முதிய உறவினரை அல்ல "அனுபவம் உரைக்கும் நூல்" என்றும்... முதியோர் காப்பகங்கள் எல்லாம் குப்பைத் தொட்டிகள் அல்ல, "பல்கலைக்கழக நூலகங்கள்" என்பதும்...

~மகேந்திரன்

Thursday, February 15, 2018

மயானத்தில் ஒரு அர்த்தநாரி




ஒரு காலக்கட்டத்தில் திருநங்கைகள் யாசகம் செய்பவர்களாகவும் பாலியல் தொழில் செய்பவர்களாகவும் எண்ணி அவர்களை முன்னேற விடாமல் ஒதுக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இந்த சமுதாயம் வைத்திருந்ததை நாம் அறிந்திருக்கிறோம் , ஆனால் இக்கால கட்டத்தில் அவர்களில் சிலர் , நாங்களும் சக மனிதர்கள் தான் என்று தங்களுடைய சுயத்தை வளர்த்துக் கொண்டு வாழ்வில் எதிர்நிச்சல் இட்டு முன்னேற்றம் அடைந்து காட்டுகிறார்கள் .

பலர் படித்து , நல்ல உத்தியோகத்திலும் மட்டும் அல்லாமல் காவல் துறை ,விளையாட்டுத்துறை , மருத்துவத்துறை மற்றும் இப்பொழுது அரசியலிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள திறமைகளுக்கு தாங்கள் கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை என்று சவால் விட்டுக் கொண்டு தங்களது திறமைகளையும் உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டு தான் இருக்கிறார்கள் .

பல போராட்டங்களுக்கு மத்தியில் சில திருநங்கைகள் முன்னேற்றம் கண்டு விட்டாலும் கூட இன்றும் பல இடங்களில் திருநங்கைகளை உதாசீனம் செய்துக் கொண்டு அசிங்கப்படுத்தி ஒதுக்கி வைத்து தான் வருகிறார்கள் . இப்படி ஒதுக்கப்படட ஒரு இளம் திருநங்கையை சமூகத்தில் இருந்து முன்னேற வழி கொடுக்காமல் சுடுகாட்டிற்குள் தள்ளி வைத்து விட்டது .

சக மனிதர்களே மயானத்திற்குள் செல்ல அச்சப்படும் பொழுது , கோவையில் உள்ள சொக்கம்புதூர் மயானத்தில் மயான பணி செய்யும் ஒரு அற்புத பிறவியாக ஒரு திருநங்கையை காண முடிகிறது.

அக்‌ஷயா வயது 21 என்ற திருநங்கை தனியொருவராக மயானத்தில் சடலத்தை புதைப்பதற்கு புதை குழி வெட்டுகிறார் . குழிக்குள் இறங்கி சடலத்தை குழிக்குள் இறக்கி வைத்து இறுதி பணிகளை மரியாதையுடன் செயகிறார். அது மட்டும் இல்லாமல் நடு இரவு என்று கூட பாராமல் சடலத்தை தனியொருவராக இருந்து எரியூட்டிடவும் செயகிறார்.

இதை நேரில் பார்த்து அவரிடம் சென்று அவரை பற்றி விசாரித்த பொழுது அவர் பட்ட துன்பங்களை கூறி நம் கண்கள் குளமாக்கி விட்டார்.

"நானும் சக மனிதர்களை போல ஒரு பிறவி தானே என்னை மட்டும் ஏன் இந்த சமூகம் இப்படி ஓட ஓட விரட்டிடனும் . நான் திருநங்கையாக பிறந்தது என்னுடைய குற்றமா ..? ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பொழுது தான் நான் ஒரு திருநங்கை என்று எனக்கு தெரியவந்தது என்னுடைய நடையுடை பாவனைகளை கண்டு சக மாணவர்கள் மட்டும் இல்லாமல் ஆசிரியர்கள் வரை என்னை கேலி செய்து எனது படிக்கும் ஆர்வத்தையே குழி தோண்டி புதைத்து விட்டார்கள்.

அதனை தொடர்ந்து வீட்டில் இருந்த உடன் பிறந்த சகோதரர்கள் என்னை புறக்கணித்து அவர்களுடன் சேர்ந்து இருக்க விடாமல் தனிமை படுத்தினார்கள். யார் ஒதுக்கினாலும் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை ஒதுக்கி விடமாட்டார்கள் அரவணைப்பார்கள் என்று பார்த்தால், காலப் போக்கில் தாய்ப்பாசத்திற்கும் உனக்கு இடம் இல்லை என்று பெற்றோர்களால் விரட்டப்பட்டேன்.

பசி என்ற வியாதிக்கு மருந்து தேடி சென்ற இடம் எல்லாம் விஷம் கலந்த வார்த்தைகளை அள்ளிக் கொடுத்தார்கள். அதை உண்டு உயிரை மாய்த்துக் கொள்ள மனம் இல்லை. வாழ்க்கையில் முன்னேற வேண்டும் நானும் மண்ணில் பிறந்த மனுஷிதான் எல்லோருக்கும் இருக்கும் அனைத்து உரிமைகளும் எனக்கும் இருக்கிறது. அர்த்தநாரீஸ்வரர் கடவுள் என்றால் வணங்குகிறார்கள் , ஆனால் அரவாணிகள் என்றால் ஓட ஓட விரட்டி அடிக்கிறார்கள். இவர்கள் மத்தியில் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது. எந்த வேலை செய்தால் என்ன செய்யும் வேலையில் உண்மை நேர்மை இருக்க வேண்டும் என்று வேலை தேடி அலைந்தேன்.



அந்த நேரத்தில் தான் சொக்கம் புதூர் மயானத்தில் வெட்டியானாக வேலை செய்யும் வைரமணி அம்மாவின் தொடர்பு கிடைத்தது . அவரிடம் நான் என்னுடைய நிலையைப் பற்றிக் கூறினேன். அவர் அன்புடன் என்னை ஏற்றுக் கொண்டு எல்லோர் வழ்க்கைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் இந்த மயானத்தில் எனக்கு ஒரு தொடர் புள்ளியை கொடுத்து வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி அமைத்துக் கொடுத்தார் .

ஒன்றரை வருடங்களாக ஈரநெஞ்சம் அறக்கட்டளையில் என்னை இணைத்துக்கொண்டு வைரமணி அம்மாவுடன் இந்த மயானத்தில் சடலங்களை புதைப்பதும் எரிப்பதும் செய்துக் கொண்டு இருக்கிறேன். இந்த பணியில் எனக்கு எந்த பயமும் இல்லை . நான் இந்த பணியில் இருக்கும் பொழுது என்னை சந்திப்பவர்கள் அவர்களையும் அறியாமலேயே எனக்கு ஒரு தனி மரியாதை கொடுப்பதையும் உணருகிறேன் . எனக்கு இந்த வாழ்வே போதும். இந்த சமுதாயம் என்னை ஒதுக்கி வைத்தாலும் இந்த பணி செய்வதற்கு பெரும் பாக்கியம் செய்ததாக எண்ணுகிறேன்." என்றார் அக்‌ஷயா



உள்ளம் உறைந்தும் நிறைந்தும நின்றோம் அக்‌ஷயாவை வாழ்த்துவதா வணங்குவதா தெரியவில்லை அவரிடம் கற்றுக் கொண்ட பாடங்கள் நிறைய... அவர் ஆசானாக தோன்றுகிறார்.



அக்‌ஷயா என்ற இந்த திருநங்கை , திருநங்கைகளுக்கு மட்டும் இல்லாமல் அவரை ஒதுக்கிய மனிதர்களுக்கும் ஒரு எடுத்துக் காட்டாக இருக்கிறார். இறைவன் படைப்பில் எந்த ஒரு படைப்புமே அர்த்தமற்றதாக இல்லையே . மண்ணில் பிறந்த அனைவருக்குமே வாழ்வதற்கு உரிமை உள்ளது.
அதை உணராத மக்களால்தான் மனிதநேயம் மடிந்து கொண்டு இருக்கிறது. அக்‌ஷயா போன்ற இன்னும் எத்தனையோ மலர்களை மலர விடாமல் தடுத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் சில வேலிகள்.

"என்று தான் தணியுமோ இந்த மனிதநேய தாகம்..!?!!!"

#மயானத்தில்_ஒரு_அர்த்தநாரி
~ஈரநெஞ்சம் அறக்கட்டளை
மகேந்திரன்
https://www.facebook.com/eeranenjam.organization