Wednesday, May 20, 2015

நான் எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரன்டா

நான் ஆட்டோக் காரன் ஆட்டோக் காரன்
நாலும் தெரிஞ்ச ரூட்டுக் காரன்
ஞாயமுள்ள ரேட்டுக் காரன்
நல்லவங்க கூட்டுக் காரன்
நல்லாப் பாடும் பாட்டுக்காரன்
காந்தி பொறந்த நாட்டுக் காரன்
கம்பெடுத்தா வேட்டைக் காரன்
பெரியவங்க உறவுக்காரன்
இரக்கமுள்ள மனசுக்காரண்டா - நான்
ஏழைக்கெல்லாம் சொந்தக் காரன்டா - நான்
எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரன்டா

பாட்ஷா படத்தில் இந்த பாடலை சூப்பர் ஸ்டார் பாடியதற்கு ஏற்ப நிஜத்தில் எந்த ஆட்டோக்காரர்களாவது இருப்பார்களா என்று கேட்டால், சட்டென்று நம்ம மதுரை நரி மேடு பகுதியைச் சேர்ந்த 35 வயது இளைஞர் இளையராஜாவை விட்டால் வேறு யாரையும் சொல்ல முடியாது. மற்ற ஆட்டோக்காரர்கள் எப்படியோ தெரியாது, ஆனால் இவர் "என் வழி தனி வழி" என்று தனக்கான வழியில் நூற்றுக்கணக்கான பயணியர்களை தன் கைவசம் கொண்டு இருக்கிறார்.  

அதை பற்றி அவரிடமே கேட்டபொழுது...
"மக்களுடைய நலன் மட்டுமே எனக்கு முக்கியம்ங்க . ஆட்டோக்காரனா இருக்கணும்னா எல்லா ரூட்டும் தெரிஞ்சு இருந்தால் மட்டும் பத்தாதுங்க, நாலு விஷயமும் தெரிஞ்சு இருக்கணும். அது மட்டும் இல்லைங்க ஞாயமான ரேட்டுலேயும் சவாரி செய்யணும்.  'ஒரு மாற்றம் கொண்டு வரவேண்டுமானால் முதலில் நான் மாறவேண்டும்' அதன் அடிப்படையிலேயே நான் மற்ற ஆட்டோக்காரர்களைப் பற்றி நினைப்பது இல்லை. மாற்றத்திற்கு நானே முன்னுதாரணமாக இருக்கணும்னு நினைச்சேன் மற்றபடி ஒன்றுமில்லை. ஒருவேளை என்னை மற்றவர்கள் பின்பற்றினாலோ அல்லது அரசாங்கமே அறிவித்தாலோ அது மக்களுக்கு மிகுந்த பயனைக் கொடுக்கும்".

  


"அப்படி என்ன மாற்றம் நீங்க செய்து இருக்கீங்க ?" என்று கேட்டதற்கு...
"மக்களுக்கு உற்ற நண்பர்களின் வரிசையில் ஆட்டோக் காரர்களுக்கும் மிக முக்கியபங்கு இருக்குங்க. பேருந்து போகாத இடம் கூட ஆட்டோவில் தான் போகவேண்டி இருக்கும். வாழ்க்கையே பரப்பரப்பான ஓட்டம் நிறைந்தது தான். சில அவசர தேவைக்கு பேருந்து அல்லது சொந்த வண்டி கூட நமக்கு உறுதுணையாக இருக்காது... அப்போதெல்லாம் இந்த ஆட்டோதான் கை கொடுக்கும். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களை சாதகமாகப் பயன்படுத்தி அவர்களிடம் பணம் பறிக்க எனக்குத் தோணலைங்க. RTO அறிவிப்பின் படி மீட்டர் கட்டணம் வசூலிப்பவர்கள் கூட இங்கு குறைவுதான். ஆனால் அந்த மீட்டர் கட்டணத்திற்கும் குறைவாக பல இலவச சலுகைகள் கொடுத்து கைத்தட்டினால் மட்டும் இல்லைங்க எனது அலைபேசியில் தொடர்பு கொண்டாலும் என் ஆட்டோ வரும்".

"உங்கள் ஆட்டோவில் சவாரி செய்தால் சலுகையா ? அப்படியென்ன சலுகை ?" என்று கேட்டதற்கு ...
"ஆமாங்க மருத்துவமனையில் கூட பிரசவத்திற்கு இலவசம் கொடுப்பது இல்லைங்க. எங்களைப் போல ஆட்டோக்காரர்கள் தான் பிரசவத்திற்கு இலவசமா வருவாங்க. ஆனால் நான் பிரசவத்திற்கு மட்டும் இலவசமா சவாரி எடுப்பது இல்லைங்க, பெண்கள் கர்ப்பமாக இருந்தாலே அவங்க மதுரைக்குள்ள எங்க போனாலும் சவாரி இலவசமாகத்தான் செல்கிறேன். அது மட்டும் இல்லைங்க 10 வயது வரையிலான சிறுவர்களுக்கு இலவசம், 70 வயதுக்கு மேல் உள்ள முதியவர்களுக்கு இலவசம், மாற்றுதிறனாளிகளுக்கு இலவசம், உடல் நலம் சரியில்லாமல் யார் அரசு மருத்துவமனைக்கு செல்லவேண்டுமானாலும் இலவசம்" ... 

  


இப்படியொரு இலவச சவாரி பட்டியல் நீண்டுகொண்டே போக நாம் பெருமூச்சு விடுவதற்குள், 
"அது மட்டும் இல்லைங்க RTO இரவு நேர சவாரி என்றால் மீட்டர் கட்டணத்திற்கு மேல் 50 சதவிகிதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம் என்று உத்தரவு இட்டுள்ளது. ஆனால் நான் அந்த 50 சதவிகிதம் கூடுதல் கட்டணம் வசூலிப்பது இல்லை... அதுவும் இலவசம். என்னுடைய ஆட்டோவில் வருபவர்கள் அவர்களுடைய தேவைக்காக எங்காவது நிறுத்த சொன்னால் அவர்கள் வரும்வரையிலான காத்திருப்பு கட்டணம் வசூலிப்பது இல்லை. காலையில் நான் சவாரிக்கு போகும் வழியில் ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் பள்ளிக் கூடம் போவது என்றால் அவர்களுக்கு இலவசம். 6 ஆம்  வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 5 ரூபாய் கொடுத்தால் போதும் செல்லும் வழியில் அவர்களது பள்ளிக்கூடம் இருந்தால் அவர்களை பள்ளியில் இறக்கிவிட்டு அந்த வழியில் என் சவாரியை மாற்றிக் கொள்வேன். அலைபேசியில் தொடர்புகொண்டு என்னை சவாரிக்கு அழைப்பவர்களுக்கும் கூட சலுகைக் கொடுக்கிறேன். யாருக்காவது ரத்ததானம் செய்ய செல்பவர்கள் என்றால் உடனடியாக நான் முந்திக் கொண்டு சென்றுவர வாடகை வேண்டாம் என்று சொல்லி விடுவேன். நானும் பலமுறை ரத்ததானம் செஞ்சிருக்கேன்".

"அடடா நீங்க சூப்பருங்க இளையராஜா கையகொடுங்க" என கைக்கொடுக்க... 
"அட இருங்க இன்னும் நான் முடிக்கவில்லை,
வெளியூர் வாசிகள் என்றால் மீட்டர் கட்டணத்தில் இருந்து 10 % சலுகை , வெளி மாநிலத்தவர்களுக்கு 20 % சலுகை , இது மட்டும் இல்லாமல் வெளி நாட்டில் இருந்து மதுரையை சுற்றிப்பார்க்க வரும் வெளிநாட்டவர்களுக்கு 30 % சலுகையும் கொடுத்து அவர்களின் பயணத்தை மகிழ்ச்சி நிறைந்ததாக்குகிறேன். என்னுடைய ஆட்டோவில் குடித்துவிட்டு சவாரி செய்ய அனுமதிக்க மாட்டேன் . புகைபிடிக்க அனுமதிக்க மாட்டேன். எந்த ஆட்டோ சங்கங்களுடனும் செல்வது இல்லை. இதனால் ஆட்டோக்கள் நடத்தும் போராட்டங்களில் கலந்துக் கொள்வதும் இல்லை இதனால் என்னை நம்பிக்கையோடு பலபேர் சவாரிக்கு அழைப்பார்கள்", என்று நமக்கு மேலும் பிரமிப்பூட்டினார்.

  


"எப்படி இந்த அளவுக்கு... அதுவும் ஆட்டோவில் அவ்வளவு வருமானம் வருகிறதா ? இல்லை சம்பாதிக்கும் பணத்தை மக்களுக்காகவே கொடுத்து விடுகிறீர்களா ? வீட்டிற்கு எதுவும் கொண்டுபோகமாட்டிங்களா ?" என்றதற்கு சிரித்துக் கொண்டே ...
 "எனக்கு அம்மா மட்டும் தான் இருக்காங்க அவங்க பெயர் சௌந்தர வள்ளி. அப்பா அழகப்பன், பதினைந்து வருடத்திற்கு முன்பே காலமாகிவிட்டார். எவ்வளவோ கஷ்டப்பட்டு முன்னேற நினைத்தும் சரியானபடி எந்த வாய்ப்பும் கிடைக்க வில்லை. மூன்று வருடத்திற்கு முன் ஒரு நெருங்கிய நண்பர் அவருடைய பணத்தை முன்பணமாக கொடுத்து, எனக்கு இந்த ஷேர் ஆட்டோ வாடகைக்கு எடுத்துக் கொடுத்தார்... நாள் ஒன்றுக்கு 350 ரூபாய் வாடகைக் கட்டவேண்டும். ஆட்டோவை மட்டுமே மூலதனமாக்காமல் என் தன்னம்பிக்கையையும், மக்கள் மீது கொண்ட அன்பையும் மூலதனமாக்கினேன். சலுகைகள் பல கொடுத்து ஏகப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இப்போது சொந்தக்காரனாக இருக்கிறேன். மாதம் 15,000 ற்கும் மேல் வருமானம் வருகிறது. எனக்கு எந்த கெட்டப்பழக்கமும் இல்லை. இதனால் அதிக அளவில் சேமிப்பும் செய்கிறேன். புதிய ஆட்டோ வாங்க இருக்கிறேன் புதிய ஆட்டோ வந்ததும் இன்னும் நிறைய சலுகைகள் அறிவிப்பேன்" என்று கூறினார். இப்படியும் ஒரு நேர்மையான ஒரு ஆட்டோக்காரரா என்ற வியப்பில் எங்கள் விழிகள் விரிந்தது.

மதுரைக்குப் போனால் மறக்காமல் இளையராஜாவின் அலைபேசி எண்ணை எடுத்துட்டு போங்க..!!!
அவருடைய அலைபேசி எண் - 9382896599

இளையராஜா என்ற இந்த ஆட்டோக்காரர்
"ஏழைக்கெல்லாம் சொந்தக்காரன்டா..! - அவர்
எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரன்டா..!!!"
என்று சூப்பர் ஸ்டார் பாடியது போல மட்டும் இல்லைங்க...
உண்மையிலேயே சூப்பர் ஸ்டார் தாங்க ..!!!

~மகேந்திரன்
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

1 comment:

sakthi said...

வாழ்த்துக்கள் இளையராஜா சார்,உங்களை போன்ற நல்லோர் உள்ளதால் தான் மழை பெய்யுது .வாழ்த்துக்கள் மகி ஜி

Post a Comment