Monday, May 11, 2015

வாழ்வு வந்தால் அனைவரையும் வாழவைப்போமே

ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM" Services
*********************************************************************
(458 / 11-05-2015 )

எங்களுக்கும் காலம் வரும் !!!
காலம் வந்தால் வாழ்வு வரும் !!!
வாழ்வு வந்தால் அனைவரையும் வாழவைப்போமே !!!

கோவை 10-05-2015
உடலில் எந்த குறையும் இல்லாதவர்களே வாழ்வதற்கு பிறரைச் சார்ந்து இருக்கும் நிலையில் இரண்டு கால்களும் செயல்படாத நிலையிலும் சுயமாக சம்பாதித்து வாழ வேண்டும் என்ற மன உறுதியுடன் வாழ்ந்து வருபவர் ஏசுராஜ். இவரைப் பற்றி தொடர்ந்து ஈரநெஞ்சம் அறக்கட்டளை முகநூலில் எழுதி வருகிறது. இவர் இரண்டு கால்களும் செயல்படாத நிலையில் சாலையோரமாக முடி திருத்தும் பணி செய்து வருகிறார். நல்ல வீடும் கடையும் கூட இல்லாத நிலையில் இவர் இந்த வேலையை செய்து வந்ததோடு ஆதரவற்ற ஒரு பெண்ணுக்கு ஆதரவளித்து , மனநலம் சரி இல்லாத அவரது மகனுக்கும் தந்தையாக அவர்களையும் பேணி பாதுகாத்து வருகிறார். இந்த நிலையில் ஈரநெஞ்சம் அறக்கட்டளை இவரைக் கண்டு கோவை மாநகராட்சி காப்பகத்தில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு முடி திருத்தும் பணியை அளித்தது. தொடர்ந்து அதையும் செவ்வனே செய்து வந்தார் ஏசுராஜ். மேலும் ஈரநெஞ்சம் அறக்கட்டளை மூலம் இவரை பற்றி அறிந்து தினமலர் நாளிதழில் இவரை பற்றிய கட்டுரை வெளி வந்தது.
http://www.dinamalar.com/news_detail.asp?id=1238727



இவரை பற்றி அறிந்து, கோபிசெட்டிபாளையம் பாரதி வித்யாலயா பள்ளியின் நிறுவனர் திரு. வேலுமணி அவர்கள் ஏசுராஜ் அவர்களுக்கு கடை வைத்து கொடுப்பதற்கும் மற்றும் தேவையான மூலப்பொருட்களுக்கும் தேவையான நிதி உதவி அளிக்க முன்வந்தார். செய்தியை படித்த உடனே ஈரநெஞ்சம் அறக்கட்டளை அறங்காவலர் திரு. மகேந்திரன் அவர்களை தொடர்பு கொண்டு தகவல்களை கேட்டறிந்த திரு. வேலுமணி அவர்கள் உடனடியாக அவருக்கு நிதியுதவியாக ரூபாய் 50000 ஐ அளிக்குமாறு ஈரநெஞ்சம் அறக்கட்டளைக்கு வங்கி மூலம் நன்கொடையாக அளித்தார்.

அதைத் தொடர்ந்து ஈரநெஞ்சம் அறக்கட்டளையின் முயற்சியின் மூலம் இன்று 10-05-2015 ஏசுராஜ் க்கு கோவை , சாய்பாபா கோவில் பகுதியில் பெரியார் நகரில் புதிதாக கடை வைத்து கொடுக்கப்பட்டது. கடைக்கு தேவையான பொருட்களும் வழங்கப்பட்டது. சொக்கம்புதூர் மயானத்தில் மயானத் தொழிலாளியாக இருக்கும் ஈரநெஞ்சம் அமைப்பின் உறுப்பினர் திருமதி. வைரமணி அவர்கள் குத்து விளக்கு ஏற்றி வைத்து கடை திறப்பு விழாவை துவக்கினார். மேலும் ஈரநெஞ்சம் அறங்காவலர் திரு. மகேந்திரன் அவர்களின் தந்தை திரு. பழனிச்சாமி அவர்கள் தலைமையேற்று வாழ்த்தினார். திரு. வேலுமணி அவர்கள் அளித்த நன்கொடையில் கடைக்கு தேவையான பொருட்கள் போக மீதித் தொகை திரு. ஏசுராஜ் அவர்களுடன் நிதியுதவியாகவும் வழங்கப்பட்டது.




கோபிசெட்டிபாளையம் பாரதி வித்யாலயா பள்ளியின் நிறுவனர் திரு. வேலுமணி அவர்கள் கூறும்போது, தான் இன்று ஒரு கல்வி நிறுவனத்தின் நிர்வாகியாக இருந்த போதும் ஒரு காலத்தில் தானும் இதுபோல சாலையோரமாக தான் தன் வாழ்க்கையை துவக்கியதாகவும் , தன்னை போல உழைப்புக்கு முக்கியத்துவம் தரும் சக மனிதருக்கு தானும் உதவ வேண்டும் என்று எண்ணி உதவியதாகவும் தெரிவித்தார். மேலும் ஈரநெஞ்சம் அமைப்பின் பணிகள் மேலும் வளர்ந்து சிறக்கவும் இது போல இன்னும் பலர் பயன் பெறவேண்டும் என்றும் வாழ்த்து தெரிவித்துக் கொண்டார்.



தனக்கு வாழ்வாதாரம் ஏற்படுத்தி கொடுத்து உதவிய கோபிசெட்டிபாளையம் பாரதி வித்யாலயா பள்ளியின் நிறுவனர் திரு. வேலுமணி அவர்களுக்கும் அதற்கு உறுதுணையாக இருந்த ஈரநெஞ்சம் அறக்கட்டளைக்கும், தினமலர் நாளிதழுக்கும் திரு. ஏசுராஜ்  தனது மனமார்ந்த  நன்றியை தெரிவித்துக் கொண்டார்.







மேலும் கடை திறப்பு விழாவிற்காக அழைக்கப்பட்டிருந்த “ கிரேஸ் ஹேப்பி ஹோம் “ ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஒரு மாதத்திற்கு  தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் ஏசுராஜ் அவர்கள் வழங்கினார்.



~ஈரநெஞ்சம்
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment