Friday, January 23, 2015

குறள் காக்கும் காவலர் மு.தங்கவேலனார்

" குறள் காக்கும் காவலர் "
`````````````````````````````````

"டீக்கடை மு.தங்கவேலனார்"

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் தஞ்சாவூர் ,பொங்கல் திருநாளுக்கு மறுநாள் 16  ஆம் தேதி அன்று பொங்கல் விடுமுறை வாரம். ஊருக்குள் ஒரு டீக் கடைக் கூட இல்லை எல்லாம் விடுமுறைக் கொண்டாட்டம் காரணமாக பூட்டப்பட்டு இருந்தது.
பேராவூரணி நீலகண்ட விநாயகர் கோவில் அருகே ஒரு டீக்கடை மட்டும் திறந்திருக்க அந்த கடையில் அதிகாலை முதலே கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது.

அந்த ஒருக் கடை மட்டும் திறந்திருக்கிறது அப்படியானால் எல்லோரைப் போலவும் வியாபார நுணுக்கம் என்று சொல்லிக்கொண்டு மற்றக் கடையைக் காட்டிலும் விலை கூடுதலாக இருக்கும் என்ற எண்ணத்திலேயே கடைக்குள் நுழைந்தால் அங்கே 68 வயது மதிக்கத்தக்க ஒருவர் மிக உற்சாகத்துடன் தமிழ் பாடல்கள் பாடிக்கொண்டும் டீ போட்டு  வருபவர்கள் அனைவருக்கும் அதைக் கொடுத்துக் கொண்டு இருந்தார் . அதிக லாபம் மனிதனுக்கு அதிக உற்சாகம் என்று நினைத்துக்கொண்டு இருந்தால் டீக்கு விலை வெறும் ஒரு ரூபாய் மட்டும் போதுங்க என்று சொல்லி காசை வாங்கிக் கல்லா பெட்டிக்குள் போட்டு அடுத்து எத்தனை டீ ... என்கிறார்...!



டீ போட்டு கொடுத்துக் கொண்டிருக்கும் அவரிடம்
: வணக்கம் ஐயா

அவர் : " வணக்கம் . எத்தனை டீ வேணும் ? "

: " டீ வேணாம் உங்கள் பெயர் சொல்லுங்களேன் ?!"

அவர் : " என் பெயர் மு.தங்கவேலனார் வயது 68 என்ன விஷயம் ? "

: " இல்லைங்க ஊர்ல ஒரு டீக் கடை கூட இல்லை நீங்க மட்டும் தான் திறந்து வியாபாரம் செய்யுறீங்க அதுமட்டும் இல்லாமல் டீக்கு விலை அதிகம் இருக்கும் என நினைத்தால் டீயின் விலை இன்று மட்டும் ஒரு ரூபாய் ன்னு சொல்லுறிங்களே ஏன் அப்படி ? "

அவர் : " இன்று என்ன தினம் என்றார் ? "

: " நேற்று பொங்கல் அப்படி என்றால் இன்று மாட்டுப் பொங்கல் அதற்கும் இதற்கும் என்ன சம்மந்தம் ?"

அவர் : (கோபத்துடன் ஒரு பார்வைப் பார்த்துவிட்டு) " இன்று திருவள்ளுவர் பிறந்த தினம் என்றார் ."

: " அட ஆமாம் ஆமாம் சொல்லுங்க ஐயா ."

அவர் : " திருக்குறள் சிந்தனையாளர்கள் எல்லாம் ஒன்றிணைந்து திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தி போராடி வருகிறோம். திருவள்ளுவர் தினத்தைக் கொண்டாடும் வகையிலும், மொழி, மத வேறுபாடுகளை கடந்து அனைவரும் ஒன்றிணைந்து திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க போராட வேண்டும்,



எத்தனையோ பேர்களுக்கு பிறந்த நாட்களை சிறப்பாக கொண்டாடுகிறோம். ஆனால் திருவள்ளுவரின் பிறந்த தினம் இன்று என்பதுக் கூட பலருக்கு தெரியாமல் இருக்கிறது."

இந்த வரியைக் கேட்டதும் வெட்கத்தில் என் தலை குனிந்தது.

அவர் : "திருக்குறளைப் பற்றிய விழிப்புணர்வும் பலருக்கு இல்லை.  திருவள்ளுவரின் பிறந்த தினத்தை யாரும் கொண்டாடுவதும் இல்லை. திருவள்ளுவர் தினம் என்பது அவரது பிறந்த நாள். அதை அனைவரும் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதற்காக இன்று ஒரு ரூபாய்க்கு டீ விற்பனை செய்து கொண்டுள்ளேன் இன்று மட்டும் சுமார் 5000 பேர் டீ குடிக்க வருவார்கள் அதில் அரு சிலர் மட்டும் தான் ஒரு ரூபாய்க்கான காரணம் கேட்பார்கள் அவர்களிடம் விளக்கி சொல்வேன் ."



என்று கூற நாமும் திருக்குறளுக்காக போராடவேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டது.

சரி மு.தங்கவேலனார் ஐயா திருக்குறளைப் பற்றி இவ்வளவு கூறுகிறார் . இவரை பற்றி மேலும் தெரிந்துக் கொண்ட விசயங்களை படியுங்கள் . இவரது குடும்பத்தில் மூன்று தலை முறையாக பள்ளிக்கூடம் சென்றவர்கள் என்று யாரும் இல்லையாம் ஆனாலும் அனைவருமே தமிழ் புலமை வாய்ந்தவர்களாக திகழ்ந்துள்ளனர்.



குலக் கல்வி முறை பயின்றதால் இவர் பள்ளி சென்று படித்தது இல்லை. அனுபவ அறிவின் மூலம் பலநூல்களை கற்றறிந்து சிறந்த பாவலராக விளங்குகிறார். குறிப்பாக திருக்குறளை பரப்புவதிலும் திருக்குறள் நெறிப்படி வாழ வேண்டும் என வலியுறுத்தி அதன்படி வாழ்ந்தும் வருகிறார். இதனாலேயே இவர் திருக்குறள் பரப்புரை செம்மல் என்றும், திருக்குறள் பாவலர் என்றும் அழைக்கப்படுகிறார்.




சாதாரண டீக் கடை தானே வைத்திருக்கிறார் என்று என்ன வேண்டாம். அந்த டீக்கடைக்குள் ஒரு நூலகமே வைத்திருக்கிறார் . அதில் இலட்சம் ரூபாய் மதிப்பிற்கும் அதிகமான தமிழ் புத்தகங்கள் வைத்திருக்கிறார். தினசரி காலை ஒருமணிநேரம் இலவசமாக திருக்குறள் வகுப்பு நடத்துகிறார். அவரிடம் பேராசிரியர்களிலிருந்து பள்ளி மாணவர்கள் வரை திருக்குறளின் விளக்கங்களை கற்றுக் வருகிறார்களாம்.
ஆயிரமாயிரம் நூற்றாண்டு கடந்த பழமைவாய்ந்த நம் தமிழை வளர்க்க எப்படியெல்லாம் அவதாரம் எடுக்கின்றார்கள். ஆனால் இன்று பலர் தமிழை கொச்சைப் படுத்துவதில் அலாதி பிரியம் காட்டிவருவதை நினைக்கும் பொழுது மனம் கனக்கிறது.
இவரைப் போன்றவர்கள் இருக்கும் வரை தமிழ் சாகாது...!
வாழ்க நிரந்தரம் ! வாழ்க தமிழ் மொழி !

~மகேந்திரன் 
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment