Monday, November 24, 2014

புனிதம் தொலைத்த கங்கை மாதவி வம்ச நாயகியின் கதை



மாதவி வம்ச நாயகியின் கதை 

பஞ்சனை படுக்கைகளிலும் மலர் தூவிய மஞ்சத்திலும் மட்டுமே புரண்ட விலைமாது இன்று புழுதி புரள மாய்ந்து கிடக்கிறாள் .

பல மூர்க்கர்கள் உறவாடிய உடல் இன்று பல நோய்கள் உறவாடி அவள் மூச்சை மூர்சையாக்கி விட்டது.
அன்று ஆசையாசையாய் ஆபரணங்கள் அலங்கரித்த உடல் இன்று ஈக்களும் , எறும்புகளும் அலங்கரித்துக் கொண்டிருக்கிறது.

வாசனாதி திரவியங்கள் பூசி மணமணத்த உடல் இன்று புழுபுழுத்து துர்நாற்றம் வீசிக்கிடக்கிறது .

உயிரோடு இருந்தபோது பல ஆயிரம் கொடுத்து பல கைகள் தொட்டு அனுபவித்த உடல். இன்று ஆயிரக் கணக்கில் கொடுத்தாலும் தொட்டு தூக்கி குழிக்குள் போட ஒருவரும் முன் வருவதற்கு இல்லை .

விதைத்தவன் தண்ணீர் ஊற்றாமலா போவான் ? படைத்தவன் இந்த உடலையும் சுமக்க ஒரு புண்ணியவானை அனுப்பிவிட்டான் . சுடுகாடு வரை சென்று சேர்ந்தது அவ்வுடல் . அவ்வுடலுக்கு கொள்ளி வைத்து விட்டு அப்புண்ணியவான் திரும்பினான்... அரூப வடிவில் வந்தாள் அவள்...

அப்பெண் அவரிடம்...

ஐயா உங்களுக்கு மிகவும் நன்றி ... என்றாள்.
யாரம்மா நீ உனக்கு ஏன் இந்நிலை ... என்று அவர் கேட்டார் .

ஐயா நான்,
மாதவி வம்ச நாயகி நான் ... அவளைப் போலும் என் அழகிற்கு பஞ்சமில்லை கணவனின் அன்பிற்கும் பஞ்சம் இல்லை.
அன்பின் அடையாளமாய் ஒரு குழந்தை. என்று அழகான குடும்பம் எனது. செய்யாத பிழைக்கு பலியான கணவனை பிரிந்து வாழும் கொடிய நிலை உருவானது. பசித்த பிள்ளைக்கு உணவளிக்க முடியாத தருணத்தில் குழந்தை பசிக்கு உணவு பெற மனித பசிக்கு இரையாக என் உடலை நானே விலைப் பேசி கொடுக்க துவங்கினேன். அதனால் என் பிள்ளைக்கு மூன்று வேளை உணவும் நல்ல கல்வியும் கொடுக்க முடிந்தது .
எந்த சூழலிலும் என் நிலை என் மகளை சூழ்ந்துவிடக் கூடாது என தான் யார் என அவளுக்கு தெரியாமலே வளர்த்தேன். மாதவியின் மகளுக்கு "மணி மேகலை" என்றொரு காப்பியம் இருக்கிறது . ஆனால் என் மகளுக்கு "விபச்சாரி மகள்" என்ற அடைமொழி தான். அவளையும் விலை பேசும் மனித உருவம் கொண்டு அலையும் நரிகள் கூட்டம் ஒன்றா இரண்டா .

பெண்ணின் அடிமைத்தளையை உடைத்தெறிய வேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்தவனும், என்னை அடிமை நாயைப்போல் பயன் படுத்தியிருக்கிறான் .

கந்து வட்டிக்காரனும், என்னை கசக்கி அனுபவித்து விட்டு கடன் சொல்லி விட்டு போயிருக்கிறான் .

ஜாதி வெறிப் பிடித்த மனிதனும் என்னிடம் வெறிக்கொண்டு பாய்ந்து
அனுபவித்திருக்கிறான்... என்றே அரற்றினாள்.

இதைக் கேட்ட அப்புண்ணியவான் ,
ஒரு நிலைக்கு மேல் நீ திருந்தியிருக்கலாமே ... என்றார்

திருந்துவதா திருந்த நினைத்தாலே இந்த சமுதாயமும் என்னைத் தீண்டி ருசிப்பார்த்த ஓநாய்கள் கூட்டமும் என்னை திரும்ப விடவில்லை.

போலீசாரால் கைது செய்யப் பட்ட போதெல்லாம் பத்திரிக்கைக் காரர்களால் "விபச்சார அழகி" என்னும் அடைமொழியுடன் செய்தியாக்கினால் தான் அவர்களுக்கு வியாபாரம் . பெண்களை தாயாக மதிக்கும் நம் நாட்டில் எங்களுக்கு அவர்கள் கொடுக்கும் மரியாதை இது தான்.
இப்படி எங்களைப் பற்றி எழுதினால்தான் பத்திரிக்கைக்கு வியாபாரம். என்னிடம் படுத்த ஆண்களை பற்றி ஒன்றும் எழுதியது இல்லை. அவர்களின் பெயர்களை கூட போடுவது இல்லை. எங்களுக்கு ஏன் இந்த நிலை என்று கூட சொன்னது இல்லை.

காட்டிக்குள் இரைத்தேடி அலையும் விலங்குகளைக் காட்டிலும் , நாட்டுக்குள் பெண் தேகம் தேடி அலையும் விலங்குகள் அதிகம்.

எனக்கும் என் குடும்பத்திற்கும் பொருள்கள் வாங்க வேண்டுமென்றால் விற்பதற்கு என்னுடல் இருந்தது. இப்போது நிரந்தரமாக பிணமாக இருக்கும் நான் அன்று இரவு பகலாக கட்டில் மேல் பிணமாகவோ , அல்லது நடிக்கும் கருவியாகவோ இருந்தால் தான் என் பிள்ளைக்கு பால் வாங்க பணம். நிர்வாணம் மட்டுமே ஆடையாக உடுத்தி பழக்கப்படுத்தப் பட்டவள். தேகம் மேயும் மாந்தர் செய்த காயங்களை மறைப்பதற்காக நூலாடை அணியவேண்டும்.

ஆசை பட்டு இந்த தொழிலுக்கு வந்திருந்தால் கூட வேஷம் போட்டு காலம் ஓட்டி இருப்பேன். வேதனையில் வந்தவள் தூறல் சிந்தாத வானம் இருக்கும் என் கண்ணீர் சிந்தாத நாட்கள் இல்லை. என்னை வேசி என்று ஏசும் எவரைப் பற்றியும் கவலைப் பட்டதே இல்லை .என் மீது கல்லெறிய எவருக்கும் தகுதியும் இல்லை.

உலகமே சேர்ந்து பெண்ணின் பெருமையை உயர்த்துவது எவ்வளவு பெரிய நாடக செயல் ? விதவை, விபச்சாரி, முதிர்கன்னி , மலடி ,ஓடுகாலி , ஒழுக்கங்கெட்டவள் இது போன்ற புனைபெயர் எந்த ஆண்களுக்கும் இல்லையே.  அப்படி என்றால் என்னிடம் வந்தவர்கள் எல்லாம் புனித மகான்களோ.? ஒரு பெண் தன் கணவனை மட்டும் எண்ணியும், ஒரு ஆண் தன் மனைவியை மட்டுமே எண்ணியும் உள்ளன்போடு வாழ்ந்தாலே என்னை போன்றவர்கள் தோன்றப் போவது இல்லையே. 

போகட்டும்,
என்னுடைய எதிர்பார்ப்பு எல்லாம் என் சந்ததிகளுக்கும் இந்த சமுதாயம் வேசி வேடம் அணிவித்திடக் கூடாது. நான் என் வேதனையை சொல்லி என்னை உத்தமியாக்கிக் கொள்ளவில்லை என்னால் கூட எத்தனையோ குடும்பம் சீரழிந்து உள்ளது . மனுஷியாக என்னை ஏற்காவிட்டாலும் சரி என்னுள்ளும் மனம் என்ற ஒன்று உள்ளது என்பதை ஏற்ககூடாதா ? செய்த பாவங்களுக்கு பாவமன்னிப்பு கேட்கவில்லை. பாவத்திற்கு தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும் . அதை தான் அனுபவித்தேன்...  என்று வருந்தினாள் அப்பெண்.

அப்போது அந்த புண்ணியவான் :
இல்லை அம்மா உன் பாவங்கள் இன்றோடு தீர்ந்தது அம்மா , ஆமாம் உன் போன்றோர் இல்லையெனில் இந்த சமூகம் இன்னும் இன்னும் சீரழிந்து போயிருக்கும். இப்போதே தாய்க்கும், பெற்றெடுத்த மகளுக்கும், உடன்பிறந்தவளுக்கும் வித்தியாசம் தெரியாத உன்மத்தர்கள் இங்கே அதிகரித்து விட்டனர். தாரத்தை இழந்து, தன்னிச்சையைத் தீர்க்க முடியா ஆண்களுக்கு  நீதான் அம்மா ஆறுதல். உன் போன்ற உத்தமிகள் இல்லையென்றால் நிலை என்னவாகும் , நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லையம்மா .

இன்னும் இன்னும் இது போல் உள்ளத்தாலும் உடலாலும் தினம் தினம் செத்து சமூகத்திற்கு நீ ஆற்றிய பணி அளப்பரியது .பாவத்தை சுமப்பவன் கடவுளல்ல பாவத்தை தீர்த்தவர்களே தெய்வமாகிறார்கள். நீ இங்கேயே  நரகத்தை முழுமையாய் அனுபவித்து விட்டாய். இனி உனக்காக சொர்க்கம் அதோ அங்கே திறந்திருக்கிறது என்று தாயே உன்னை வணங்குகிறேன்...என்றார் . 

அவளது ஆத்மா மகிழ்வுடன் காற்றோடு கலந்தே மறைந்தது...!

~மகி
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

1 comment:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
சிந்தனைக்குஅறிவான கதை அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Post a Comment