Sunday, November 23, 2014

உலகம் அழியப்போகும் இன்னும் சில தினங்களில்



வானம் உடையுமா ?
நிலா மண்ணில் விழுமா ?
கடல் கரைத்தாண்டுமா ?
எரிமலை வீட்டின் அடுப்புக்குள் புகுமா ?
இமயம் இல்லாமல் போகுமா ?
இந்த பூமி உருண்டு ஓடுமா ?

இந்த பூமிக்கு முடிவு எப்படி இருக்கும்
என மனிதர்களுக்கு பெரும் பயம் கலந்த ஆவல் !

அடுத்தநாள் நாளிதழில்
இன்னும் இரண்டு நாளில்
நிலா உடையும்
உடைந்து
நிலா துகள்கள் பாறைகள் பூமியை தாக்கும்
என அறிவிப்பு...

மண்ணை பார்த்து நடந்த பெண்களும்
பெண்ணை பார்த்து நடந்த ஆண்களும்
இரண்டு நாளாக நிலாவை பார்த்தபடியே நடக்கிறார்கள்...

நிலாவைப் பற்றி வர்ணித்த பேனாக்கள் எல்லாம்
இப்போது நிலாவை பற்றி வரலாறு எழுத ஆரம்பித்தது....

நிலா கவிஞர்கள் கண்ணில்
நிலா பெரும் பாரத்தை தூக்கி வைத்தது...

பெண்ணை நிலா என கூறியவர்கள்
நிலா தான் பெண் என மாற்றி பேச ஆரம்பித்தனர்...

இரண்டு நாள் கழிய சில மணிநேரம்
பாக்கியாக வந்தது

கிட்டத்தட்ட பூமியின் முடிவு
உறுதியானது.

நிலா உடையும் சத்தம்
நீலாம்பூர் வரை செவி அடைத்தது...

அனைத்து தொழிற்சாலையும்
விடுமுறை அறிவிக்கப்பட்டுவிட்டது...

வெளியூர் வேலை வாசிகள்
முண்டியடித்து குடும்பத்துடன் சேர்ந்து போக
பேருந்தைத் தேடி...

பங்களாவாசிகள் பதுக்காத மீதிப் பணத்தை
பதுக்க பாதாளம் தேடி...

சில காதல் வாசிகள்
இறுதி முத்தத்தைத் தேடி...

போதை வாசிகள்
மரண வலி தெரியக் கூடாது என
டாஸ்மாக் தேடி...

பாச வாசிகள்
இறுதி கட்ட பாசம் காட்ட
தொலை பேசி தேடி...

ஆன்மீக வாசிகள்
சிறப்புப் பிரார்த்தனை என
தேவாலயம் , கோவில், மசூதி தேடி...

சாலை எங்கிலும்
மக்கள் நெரிசல் சாலை விதிகளை மீறி
மாரத்தான் ஓட்டம்...

டாஸ்மாக்கில் குடிக்கும் கணவனை
வீட்டிற்கு வரச்சொல்லி அழுகை...

துடிக்கும் இதயம் எல்லாம் துடி துடிக்க
ஆரம்பித்துவிட்டது...

முன் பதிவு செய்து கட்டிக்கொண்ட
கல்லறையில் அடுத்தவன் புகுந்துவிட கூடாது
என தன் கல்லறையை தேடி...

இன்னும் சில நிமிடம் தான்
என அறிவிப்பு வந்தது...

தொலைகாட்சி சிறப்பு செய்தி

அழிவைப் பற்றி அறிவிப்பு வாசிப்பாளர்
கடைசி நிமிடம் என தெரிந்தும் முகத்தில் மேக்கப்பும்
புது சேலையும் செயற்கையாய் ஒட்டி வைத்த சிரிப்புடன்...

போக்குவரத்து நெரிசலில் சிக்கி நடந்தே வீட்டிற்கு
ஓடும் ஒபாமாவையும்...

தூய்மை இந்தியாவிற்காக
விளம்பரத்திற்கு நடிக்க
வந்த நடிகைகளையும் நடிகர்களையும்
மரணபயம் முகத்தில் விளையாட
விளக்குமாறை கீழே போட்டுவிட்டு ஓடுவதை
காட்டிக்கொண்டு இருந்தது...

நிலா பாறைகள் பூமியை நோக்கி
கண்ணில் தெரியும் தூரம்...

சில நொடிகள்

உலகமே மரண பயம் வாயை அடைத்துகொண்டது
பூமியெங்கும் சப்தம் நின்று நிசப்தம் பரவியது...

வீட்டை தேடும் பதட்டத்தில்
ஒரு தாய் தன் கைக் குழந்தையை மறந்தாள்...

குழந்தை பசிக்கு அழுதது
பூமியின் நிசப்தத்தால் அழுகை
சிங்காநல்லூரில் இருந்து சிங்கப்பூர்வரை
எதிரொலித்தது...

வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த
பசு ஒன்று குழந்தை அருகில் வந்தது
குழந்தை பசுமாட்டின் காலைபிடித்து
மடிதேடி வாய் வைத்தது...!

~மகி
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment