Saturday, November 09, 2013

ஒரு ஊர் இரண்டு தீபாவளி


மயிலந்தீபாவளி.
பசுமை நிறைந்த கிராமம் , இதமான தட்பவெட்பம் , விவசாய பூமி , மக்களிடையே கள்ளம் கபடம் இல்லை. எங்கு பார்த்தாலும் பசுமை இதுவரை எந்த ஒரு தொழிற்சாலை அதிபர்களின் கண்களுக்கும் படாததால் அங்கு இன்னும் மண்வாசம் வீசிக்கொண்டுதான் இருக்கிறது. கோவையில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த பசுமையான கிராமம் வடசித்தூர்.
இங்கேதான் மக்கள் இரண்டு தீபாவளி கொண்டாடுகின்றனர். தீபாவளி நாளில் கூட ஊர் களைகட்டுவது இல்லை. அதற்கு அடுத்தநாள் மயிலன் தீபாவளியாக சுத்துப்பட்டு 16 கிராம மக்களும் வடசித்தூரில் சங்கமமாகி இந்து , கிறித்தவர், இஸ்லாமியர் என சமயம் பாராமல் ஒரே குடும்பமாக கொண்டாடுகின்றனர். பலவிதமான விளையாட்டுகளும் ஒயிலாட்டம்,மயிலாட்டம், கூத்து, கேளிக்கை , பட்டாசுகள், மற்றும் வித விதமான உணவு என்று இந்த மயிலன் தீபாவளியை கொண்டாடுகின்றனர். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அப்படி ஒரு சந்தோசத்தோட இந்த மயிலன் தீபாவளில கலந்துகிட்டு சந்தோஷ படறாங்க. தலை தீபாவளிக்கு வந்த புது தம்பதியினரை கூட மயிலந்தீபாவளி அன்று மிக சிறப்பாக உபசரிக்கிறார்கள் வடசித்தூர் மக்கள் அனைவருமே.
அது சரி.. அதென்ன "மயிலந்தீபாவளி"
அங்கே கொண்டாடும் சிலரிடம் விசாரித்தபோது , ஏறக்குறைய சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் இந்த பசுமை கொஞ்சும் வடசித்தூர் கிராமத்தை ஆட்சி செய்தவர் 'மயில்சாமிக் கவுண்டர்'. அந்த ஊருக்கு நிறைய நன்மைகளை செய்தார். அவரது பேச்சுக்கு கட்டுப்பட்டு அந்த ஊர் மக்கள் நடந்துகிட்டாங்க. அவர் மேல ஊர் மக்கள் எல்லோரும் மிகுந்த மரியாதை வச்சிருந்தாங்க. இவரைக் கேட்காமல் ஒர் அணுவும் அசைந்ததில்லை இவருடைய சொல்லில் துவங்கியதுதான் இந்த மயிலன் தீபாவளி .
வடசித்தூர் கிராம மக்கள் இன்னால் வரையிலும் செவ்வாய்க் கிழமை அசைவ உணவு உண்பதில்லை என்ற வழக்கம் கொண்டு இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது சுமார் 100 வருடங்களுக்குமுன் ஒரு தீபாவளி செவ்வாய்கிழமையில் வந்தது, .தீபாவளி அன்று அசைவம் இல்லை என்றால் எப்படி..? அதுவும் தலைதீபாவளிக்கு வந்த புது மாப்பிள்ளையை எப்படி உபசரிப்பது? வந்திருக்கும் பிள்ளைகள் எப்படி மகிழும் என்றும் தீபாவளி சிறப்புடையதாக இருக்காதே என மக்கள் குழம்பிய நிலையில், பெரியவர் மயில்சாமி அவர்களிடம் யோசனைக் கேட்க அவரும் ''ஏன் நாளைக்கு மாமிசம் சாப்பிட்டால் என்ன?'' நாளையும் தீபாவளி கொண்டாடலாமே என்று முடிவெடுத்து அந்த வருடம் தீபாவளிக்கு அடுத்தநாள் மீண்டும் தீபாவளி கொண்டாடினர்.
எதிர்பாராதவிதமாக அடுத்து வந்த தீபாவளியும் செவ்வாய்க் கிழமையே வர, மக்களும் அதற்கடுத்த நாளையே மிகச் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். இப்படி கொண்டாடுவது ரொம்ப மகிழ்ச்சியா இருந்ததால ஒவ்வொரு வருசமும் தீபாவளிக்கு அடுத்த நாளும் இவங்க ஊர் மக்கள் எல்லாரும் சேர்ந்து தீபாவளி கொண்டாட ஆரம்பிச்சாங்க. பக்கத்துக்கு கிராம மக்கள் இந்த விழாவை பற்றி கேட்கும் போது மயில்சாமி ஐயா சொல்லி இருக்காங்க அதனால நாங்க இப்படி இந்த நாளும் கொண்டாடுகிறோம் என்று கூற காலப்போக்கில் மயில்சாமி தீபாவளி, மயிலந்தீபாவளி என்று ஆகி சுத்தி இருந்த 16 கிராம மக்களும் இவங்களோட இந்த தீபாவளியில கலந்துக்க ஆரம்பிச்சாங்க.
100 ஆண்டுக்கு முன் மயில்சாமிக் கவுண்டரால் உருவாகிய இந்த வழக்கத்தை இன்றளவும் இளைய தலைமுறைகளும் ஏற்று கொண்டாடுவது நம்மை ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கிறது.அவரது பெயரிலேயே ''மயிலந்தீபாவளி" யில் 16 கிராம மக்களும் வடசித்தூரில் ஒன்று கூடி இந்து, முஸ்லீம்,கிறித்தவர் என மதப் பாகுபாடின்றி ஒருவரையொருவர் ஆரத்தழுவி கொண்டாடி மகிழ்வது சிறந்த மதநல்லிணக்கத்திற்கு உதாரணமாக உள்ளது. இப்படிப் பட்ட நிகழ்வுகளை வரவேற்பது நம் கடமை.
காலங்கள் கடந்தும் காவியம் படைக்கிறது "மயிலந்தீபாவளி"
~நிறைமதி
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment