Tuesday, November 19, 2013

"உலகமே உன்னைக் கண்டு வியக்குதம்மா வைரமணி"

"உலகமே உன்னைக் கண்டு வியக்குதம்மா வைரமணி"

பெண்கள் எல்லோருமே அவரவர் தகுதிக்கேற்ப உழைக்கின்றார்கள். ஆண்களை காட்டிலும் பெண்களது சாதனை தற்போது விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து உள்ளது . பெண்ணின் துணிச்சலும் அந்த அளவிற்கு உயர்ந்துவருகிறது . அந்த வரிசையில் ஆச்சரியமூட்டும் ஒரு துறையிலும் ஒரு பெண் சாதித்து வருகிறார்.
பிணம் என்றாலே பெண்களை அருகில் விடுவது இல்லை, இறந்தவர்களை அடக்கம் செய்ய சுடுகாட்டிற்கு போவதென்றால் கூட ஆண்கள் மட்டும் தான் செல்வார்கள். இந்த காலம் எல்லாம் மலை ஏறிவிட்டது. புலியை முறத்தால் விரட்டிய பெண்ணின் வம்சம் கொண்டவளோ... இவள் நடு சாமத்தில் தனி ஒருத்தியாக சிதையை எரியூட்டுகிறாள். கோவையில் சொக்கம் புதூர் மயானத்தில் வெட்டியானாக (வெட்டியாள்) 30வயது வைரமணி என்னும் பெண்மணி.
நான் இவரை சந்தித்த சூழ்நிலை என்னால் மறக்க முடியாத ஒன்று. மிக இக்காட்டான ஒரு சூழ்நிலையில் எனக்கு பெரும் உதவி புரிந்தவர் இந்த வைரமணி. சுட்டாலும் இவரை மறக்காது அப்படி ஒரு உதவி , ஒரு ஆதரவற்ற சடலத்தை அடக்கம் செய்ய வழக்கமாக நல்லடக்கம் செய்துவரும் அமைப்பில் கூட அந்த தினத்தில் எனக்கு உதவ கைவிரித்து விட்டனர் , உதவிக்கு அழைத்த உடன் இருந்த நண்பர்கள் கூட உதவ முன்வரவில்லை, சடலத்தை நடு வீதியில் வைத்துக்கொண்டு அல்லல் பட்ட நிலையில் வைரமணியை அழைக்க "அண்ணா நான் இருக்கேன்... நீங்க கொண்டுவாங்க... நான் செய்து தரேன் பார்த்து கொள்ளலாம்" என்ற வார்த்தை .
அப்போது அவர் கூறிய இந்த வார்த்தைக்கு நான் என்ன கைம்மாறு செய்தாலும் மிகையாகாது. அந்த உதவிக்கு எந்த அளவுக்கு பணம் கொடுப்பது... அப்படி கொடுத்தால் மட்டும் அதற்கு நிகராகிடுமா ? . எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் கடவுள் நேரில் வந்து உதவுவது இல்லை , ஆனால் அவர் சொன்ன "அண்ணா நான் இருக்கேன்" என்ற வார்த்தை கடவுளின் குரல் ஒலித்தது போல இருந்தது .
இந்த பெருந்தன்மையான வார்த்தைக்கு தகுந்த பலனை அவர் பெற வேண்டும் . என்று அன்றே என் மனதில் தோன்றியது. என்னுடைய நம்பிக்கையும் அவரது புனிதமான பணியும் உன்னதமானதாக இருந்தால் அவர் சொன்ன வார்த்தைக்கும் உதவிக்கும் இறைவனால் மட்டுமே தகுந்த ஊதியம் கொடுக்க முடியும் .
இவரது துணிச்சல் , இவரது பணியைப்பற்றி என்னுடைய பத்திரிக்கை நண்பர்களிடம் கூறியதில் , இவரைப்பற்றி கோவை முழுவதும் பல நாளேடுகளிலும் தொலைக்காட்சிகளிலும் இந்த பெண்ணின் சிறப்பை அறிமுகப்படுத்தினார்கள் . அதன் மூலம் வைரமணிக்கு அவரது பணியை ஊக்குவிக்கும் அளவில் "நேசம்" என்ற அமைப்பு ஆயிரம் பேர் மத்தியில் கவுரவித்து விருதும் வழங்கியது.
எதுவும் இறைவனது அருள் இல்லாமல் நடந்திடாது , இறைக்கு இணையான பணியை மேற்கொள்ளும்போது இறைவனே இறங்கிவரமாட்டானா என்ன , எல்லாம் அவன் செயல் .
அமெரிக்க பத்திரிகையில் வைரமணி
"அண்ணா நான் இருக்கேன்" என்ற வார்த்தைக்கு அவ்வளவு சக்தி இருக்கிறதா என்ன இவரது உன்னதத்தை இன்னும் உலக மக்களுக்கும் அறிந்தாகவேண்டும் என்று அமெரிக்காவில் மிகவும் பிரபலமான "தென்றல்" தமிழ் மாத இதழில் இவருடைய பேட்டிக்கு இடம் கிடைத்தது அதுவும் வைரமணியை நான் நேர்க்காணல் செய்து.
நானாக ஒருவரை நேர்க்காணல் செய்து பத்திரிக்கையில் எழுதுவது அதுவும் அமெரிக்க " தென்றல் " மாத இதழில் வெளிவந்தது எனக்கு அந்த பத்திரிக்கை கொடுத்த மரியாதையாகவே எண்ணுகிறேன் . அந்த வாய்ப்பை எனக்களித்த அரவின் சுவாமிநாதன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறேன்
"தென்றல்" மாத இதழில் முகப்பு அட்டையில் வைரமணியின் புகைப்படத்துடன் , அமெரிக்காவில் தென்றல் மாத இதழில் இடம் பிடிப்பது என்பது மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. அதிலும் முகப்பு அட்டையில் புகைப்படம் கிடைப்பது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்ட இடமும் அறிய கவுரவம் ஆகும். அதில் வைரமணி செய்தி நவம்பர் 1 ஆம் தேதி பிரசுரத்தில் வெளிவந்துள்ளது.



இந்த சூழ்நிலையில் எனக்கு உதவ அவர் கூறிய "அண்ணா நான் இருக்கேன்" என்ற வார்த்தைகளுக்கான வெகுமதி இறைவன் அவருக்கு கொடுத்து விட்டதாகவே நான் எண்ணுகிறேன். எங்கோ ஒரு மூலையில் சொக்கம்புதூரில் மயானத்தில் இருக்கும் வைரமணி இன்று அமெரிக்க மக்கள் முதல் ஒவ்வொரு தமிழரின் மனதிலும் நிச்சயம் இடம் பிடித்திருப்பார் என்று திருப்தியும் எனக்கு ஏற்படுகிறது. இவரை போன்றவர்களை தாழ்த்தப்பட்டவர்களாக எல்லோரும் எண்ணும் நிலையில் வைரமணி மிக உயரிய இடத்தை அடைந்து விட்டார். இவரை பற்றி படிக்கும் எல்லோருக்கும் நிச்சயம் பெண்கள் மீதான மதிப்பு மேலும் கூடும், இதை எல்லோரும் படிக்க வேண்டும் என்று நான் கட்டாயப் படுத்தவில்லை
ஆனால் படித்து பாருங்கள். இவரை போன்றவர்களை பற்றி தெரிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.

நன்றி
~மகேந்திரன்

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment