Tuesday, October 08, 2013

உதவலாம் வங்க ~மகேந்திரன்

தீபாவளி, கிறிதுஸ்மஸ், பொங்கல் என விழாக்காலங்கள் வருகின்றது. எல்லோருக்கும் அந்த சமயங்களில் தான் அவர்களது போனஸ் , மற்றும் சேமிப்பு என பண வரவும் இருக்கும், அதில் பலரும் ஆதரவற்ற காப்பகங்களில் இருப்பவர்களுக்கு உதவிகள் தருவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர் , சிலருக்கு எப்படி செயலாற்றலாம் என்று குழப்பமும் , அறியாமலும், அல்லது சிலருக்கு நாம் செய்வதுதான் சரி என்ற எண்ணமும் இருக்கலாம் . இதனால் உதவி பெறுபவர்கள் அவர்களது அடிப்படைத் தேவைகள் நிறைவடையுமா..?, அது அவர்களுக்கு போதிய மன நிறைவை தந்திடுமா.? "பாத்திரம் அறிந்து உதவிடு" என்பார்கள் அதற்க்கு அர்த்தம், தேவையை அறிந்து உதவிடு என்றும் பொருள் உள்ளது. உதவி செய்யும் நோக்கம் உயர்ந்தது என்றாலும் அதனால் நம் மனம் நிம்மதி அடைந்தால் மட்டும் போதுமா , உதவி பெறுபவர்கள் மனநிறைவடைய வேண்டாமா... ?

அப்படி நீங்கள் செய்யும் உதவிகள் உதவி பெறுபவரை மன நிறைவும் மகிழ்வும் அடையும் படி இருக்க சில வழிகள் இதோ..
1.எந்த காப்பகம் செல்லலாம் என்பதை முடிவு செய்யுங்கள் அந்த காப்பகம் உதவி பெறுவதற்கு தகுதி உடையதா என்பதை உறுதி படுத்திக்கொள்ளுங்கள் .

2.அந்த அமைப்பு நிர்வாகிகளுடன் முதலில் தொடர்பு கொண்டு காப்பகத்தில் இருப்பவர்களுக்கு தேவை என்ன எனத் தெரிந்து கொள்ளுங்கள். இது உங்களுக்கு விருப்பமானதைக் கொடுப்பதை விட, அவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்வதாக இருக்கும்.

3 .இனிப்பு, பழவகைகள் அல்லது ஏதேனும் பொருட்களை கொடுக்க ஆதரவற்றவர்களை வரிசையில் நிறுத்தி நீங்களே அதை கொடுக்காதீர்கள். அவ்வமைப்பு நிர்வாகிகளிடம் கொடுத்து அவர்கள் மூலமாகவே பகிர்ந்தளியுங்கள். இது முன்பின் தெரியாத ஒருவரிடம் அவ்வாறு வாங்குவது அவர்களின் தன்மானத்தை காயப்படுத்தாமல் இருக்கலாம்.

4.பழைய ஆடைகள், பழைய நோட்டுகள் போன்றவற்றைத் தரும்போது அவை உபயோகிக்கும் நிலையில் உள்ளதா என ஒன்றுக்கு இரண்டு முறை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். ஆடைகளைத் துவைத்து, கிழிந்து இருந்தால் அவற்றைத் தைத்துக் கொடுங்கள்.பல நோட்டுகளில் இருக்கும் உபயோகப்படுத்தாத பக்கங்களை ஒரே நோட்டாக பைண்ட் செய்தோ அல்லது தைத்தோ கொடுங்கள். இது அவர்களுக்கு முழுமையாக பயன்பட ஏதுவாக இருக்கும்.

5.தீபாவளி, கிறிஸ்மஸ், பொங்கல், புது வருடம் போன்ற பண்டிகை நாட்களில் புதியதாக ஸ்பான்சர் செய்பவர்கள் நிறைய பேர் வருவார்கள். நன்கொடைகளும் கிடைக்கும். அதனால் வழக்கமாக காப்பகங்களுக்கு செல்பவர்கள் அப்படிப்பட்ட விழாக் காலங்களில் செல்வதை தவிர்த்திடுங்கள். .
6.காப்பகத்திற்கு அங்கே செல்லும்போது, பகட்டான உடைகளை அணிந்து செல்வதை தவிர்த்து, முடிந்தவரை எளிமையாய்ச் செல்லுங்கள். இது காப்பகத்தில் உள்ளவர்களின் ஏக்கத்தை தவிர்க்கலாம்.

7.குழந்தைகளின் பிறந்தநாளில், குழந்தைகள் காப்பகத்திற்கு சென்றுதான் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தை தவிர்த்து , முதியோர் காப்பகத்தில் கொண்டாடுவதை மாற்றிக்கொள்ளுங்கள் . ஆதரவற்ற குழந்தைகளின் ஏக்கம் எல்லாம் தாய் தந்தையின் அரவணைப்பு கிடைக்காதா என்றுதான் இருக்கும் . அங்கு உங்களது குழந்தைகளை அழைத்து சென்று பிறந்தநாள் கொண்டாடுவது . ஆதரவற்ற குழந்தைகளின் ஏக்கத்தை இன்னும் அதிகரிக்கும்.

8. சாதாரண நாட்களில் ஆதரவற்ற குழந்தைகளுடன் உங்கள் குழந்தகளை விளையாட அனுமதியுங்கள். இது உங்களது குழந்தைகளுக்கும் பல பக்குவத்தை கொடுக்கும்.

9.நீங்கள் காப்பகத்திற்கு சென்று உணவோ அல்லது மற்ற பொருட்களையோ கொடுப்பதுடன் திரும்பி விடாதீர்கள் , சிறிது நேரமாவது அவர்கள் மனம் விட்டு பேச நீங்கள் அவர்களுடன் உங்களது நேரத்தையும் கொடுங்கள். இது கொடுக்கும் பொருட்களைவிட உங்களது அன்பான சொற்கள் அவர்களுக்கு மிகுந்த மகிழ்வைத் தரும்.

10.அப்படி பேசும் போது அவர்களின் சிறு,சிறு தேவைகளும் உங்களுக்கு புரியவரும் அதை பூர்த்தி செய்ய முயலுங்கள்.
9.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வேறு வேறு காப்பகங்களுக்கு செல்வதை விட ஒரே இல்லத்திற்கு அடிக்கடி‌ செல்லுங்கள் . இது ஆதரவற்றவர்களுடனான நல்ல நட்புறவை வளர்க்கும்.

11. காப்பகங்களுக்கு செல்ல உணவு அல்லது மற்ற பொருட்களுடன் தான் கொண்டு செல்ல வேண்டும் என்றெல்லாம் இல்லை . நேரம் கிடைக்கும் போதெல்லாம் அங்கு சென்று அவர்களுக்கு சிறு சிறு உதவிகள் செய்தல் அல்லது அவர்களுடன் விளையாடுவது நல்லது.


இது போல் வழக்கபடுத்தி கொள்ளும் போது நாம் மகிழ்வதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கும் உண்மையான முழுமையான மகிழ்வை கொடுத்த மன திருப்தியும் இருக்கும். "நாம மகிழ்வதை விட, நாம் மற்றவர்களை மகிழ்வடைய செய்வதில் தானே உண்மையான மகிழ்ச்சி இருக்கும்"

~மகேந்திரன்

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment